கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி மும்முரம்
ராஜபாளையத்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கழிவுநீர் கால்வாய்
ராஜபாளையம் பழைய பஸ் நிலையம், தென்காசி ரோடு, அரசு மகப்பேறு மருத்துவமனை, காந்தி சிலை ரவுண்டானா ஆகிய பகுதிகளில் இருபுறமும் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படவில்லை. தற்போது கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பழைய துணிகள் நிறைந்து காணப்படுகின்றது.
இதனால் மழை நேரத்தில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுவதாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி சேர்மன் பவித்ரா உத்தரவின்பேரில் ஆணையர் பார்த்தசாரதி முன்னிலையில் தூர்வாரும் பணி தொடங்கியது.
தூர்வாரும் பணி
இந்த பணியில் சுகாதார ஆய்வாளர்கள் காளி, மாரிமுத்து, தூய்மைப்பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆணையர் பார்த்தசாரதி கூறியதாவது:- நகராட்சி பகுதியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் ராஜபாளையம் நகர் பகுதிகளில் பல்வேறு குழந்தைகள் பலியாகி உள்ளனர். ஆகையால் அனைத்து கழிவுநீர் கால்வாய்களும் தூர்வாரப்படுகின்றன. மழைக்காலங்களில் வாருகால் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் கழிவு நீருடன், மழைநீரும் சேர்ந்து சாலையில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால் நகராட்சி நிர்வாகம் வாருகால் மண்மேடுகளை அகற்றி 9 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரும் பணியில் சுகாதாரப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் வாருகால் மண் மேடுகளை நவீன எந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகின்றது. இதனால் சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.