கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
கன்னிகாபுரம் குடியிருப்பில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) தனஞ்செயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா, கடனுதவி உள்ளிட்டவை தொடர்பாக 355 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கழிவுநீர் கால்வாய் வசதி
வேலூரை அடுத்த கன்னிகாபுரத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் குடியிருப்பில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் குடியிருப்பு வளாகத்தில் தேங்கி கொசு உற்பத்தியாகும் நிலை உள்ளது. எனவே அங்கு கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். மேலும் எங்கள் குடியிருப்புக்கு குடிநீர், கண்காணிப்பு கேமரா வசதி, சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என கூறியிருந்தனர்.
காட்பாடி அருகே உள்ள கல்புதூர் ராஜீவ்காந்தி நகர் 3-வது மெயின்தெருவை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் தெருவில் கழிவுநீர் கால்வாய் இல்லாமல் சிரமப்படுகிறோம். இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்துள்ளோம். அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கழிவுநீர் கால்வாய் அமைத்துத்தர வேண்டும் என கூறியிருந்தனர்.
வீட்டுமனை பட்டா
குடியாத்தம் அருகே உள்ள பள்ளிகுப்பம் கிராம பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் வந்து அளித்துள்ள மனுவில், எங்கள் கிராமத்திற்கு கிராம நிர்வாக அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மைய கட்டிடம், ஊராட்சி மன்ற கட்டிடம், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், உயர்நிலைப்பள்ளிக்கு விளையாட்டு திடல், உடற்பயிற்சி கூடம் ஆகியவை கட்டித்தர வேண்டும் என கூறியிருந்தனர்.
காட்பாடி தாலுகா வண்டறந்தாங்கல் அருகே அக்கிரெட்டிபுதூர் கிராமத்தை சேர்ந்த சிலர் அளித்துள்ள மனுவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.
கலெக்டரிடம் வாழ்த்து
தாட்கோ சார்பில் 13 பேருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் குளவிமேட்டில் கட்டப்பட்ட குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆணையை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார். அப்போது தாட்கோ மேலாளர் பிரேமா உடன் இருந்தார்.
டெல்லி நொய்டாவில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபெற்று மிக இளையோர் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் கிஷோர் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பயிற்சியாளர்கள் விநாயகமூர்த்தி, சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
மேற்கண்ட போட்டியில் சத்துவாச்சாரியை சேர்ந்த அஜித் சீனியர் பிரிவில் தங்கமும், டி.மாதவன் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். இவர்கள் இருவரும் பஞ்சாப் பாட்டியாலாவில் பயிற்சி முகாமில் பயிற்சி மேற்கொண்டு வருவதாக மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் தெரிவித்தார்.