கோட்டை மைதானத்தில் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆய்வு
ஆரணி கோட்டை மைதானத்தில் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ஆரணி
ஆரணி கோட்டை மைதானத்தில் மினி விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வந்தன.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி ஏழுமலை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி மதிப்பில் கோட்டை மைதானத்தை சுற்றிலும் பொதுமக்கள் பயன்படும் வகையில் நடைப்பயிற்சி மேடை அமைக்கப்பட்டது.
ஆங்காங்கே இருக்கைகள், மின் விளக்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை முறையாக பராமரிக்காததால் இருக்கைகள், தடுப்பு கம்பிகள் உடைக்கப்பட்டு, செடிகள் அடர்ந்து காணப்படுகின்றன. சிறிய மழை பெய்தால் கூட மழை நீர் குளம் போல் தேங்குகிறது.
மழை நீர் வெளியேறுவதற்கான வழிவகை செய்யப்படாததால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக கோட்டை மைதானத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி இருப்பதால் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பல்வேறு புகார்கள் எழுந்ததையொட்டி இன்று மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் நான்சி ஆய்வு மேற்கொள்ள வந்திருந்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கட்சி நிர்வாகிகளுடன் சென்று கோட்டை மைதானத்தை பார்வையிட்டு குறைகளை தெரிவித்தார். மேலும் விளையாட்டு துறையில் அதிக நிதி உள்ளது.
எவ்வளவு தேவை என்பதனை குறிப்பிட்டு கடிதம் அனுப்பினால் உடனடியாக அமைச்சரிடம் பேசி நிதி பெற்றுத்தருவேன் என்றார்.
பின்னர் சிறிது நேரத்தில் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, நகராட்சி ஆணையாளர் பி. தமிழ்ச்செல்வி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கோட்டை மைதானத்தை சுற்றி பார்த்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மூலமாக அரசுக்கு கோரிக்கை வைத்து விளையாட்டு அரங்கத்தினை சீரமைத்து தருவதாக நகர மன்ற தலைவர் தெரிவித்தார்.