கழுகுமலை, குரும்பூரில் பாலியல் தொல்லை வழக்கில் கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
கழுகுமலை, குரும்பூரில் பாலியல் தொல்லை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
போக்சோ வழக்கு
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வழக்கில் கழுகுமலை வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் மாரிமுத்து என்ற எமிலிகுட்டன் (வயது 30), ஆண்டவர் மகன் பாண்டிசெல்வம் (22), லெட்சுமணன் மகன் பால்ராஜ் என்ற விஜி (35), ராமநாதன் மகன் காளிராஜ் (26) ஆகிய 4 பேரையும், சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதே போன்று குரும்பூர் பகுதியில் இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஏரல் பெருங்குளம் சன்னதி தெருவை சேர்ந்த அய்யப்பநயினார் என்ற மணிகண்டன் மகன் முத்துராம்குமார் என்ற தங்கம் (27), குரும்பூர் புறையூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுபாஷ் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், மாரிமுத்து என்ற எமிலிகுட்டன், பாண்டிசெல்வம், பால்ராஜ் என்ற விஜி, காளிராஜ், முத்துராம்குமார் என்ற தங்கம், சுபாஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 12 பேரும், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் உள்பட மொத்தம் 95 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.