பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறல்: தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட 2 பேர் கைது


பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறல்: தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட 2 பேர் கைது
x

சென்னையில் பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை சாலிகிராமத்தில் கடந்த டிசம்பர் 31-ந் தேதி தி.மு.க. பொதுகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் திருமணம் ஆகாத பெண் போலீஸ் ஒருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

கூட்ட நெரிசலில் தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த பிரவீன் (வயது 23), ஏகாம்பரம் (24) ஆகிய 2 பேரும் பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதை பெண் போலீஸ் கண்டித்து உள்ளார். தொடர்ந்து அவர்கள் அத்துமீறலில் ஈடுபடவே அவர் கூச்சலிட்டார்.

பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் பிரவீன், ஏகாம்பரம் ஆகியோர் மீது பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் அடிப்படையில் சி.எஸ்.ஆர். ரசீது உடனடியாக வழங்கப்பட்டது.

கட்சியில் இருந்து நீக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பிரவீன், ஏகாம்பரம் ஆகிய 2 பேரும் தெரியாமல் கைப்பட்டு விட்டதாகவும், தங்களை மன்னிக்கும்படியும் பெண் போலீசிடம் கேட்டதாக தெரிகிறது. அந்த பெண் போலீசும் அதனை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே பெண் போலீசிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டது.

இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவதாக நேற்று முன்தினம் இரவு அறிவிப்பு வெளியானது.

கைது

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் பிரவீன், ஏகாம்பரம் ஆகியோர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் அவர்கள் 2 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

உடனடியாக அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story