பஞ்சாயத்து துணைத்தலைவர் மீது இளம்பெண் பாலியல் புகார்
சுரண்டை அருகே அரியநாயகிபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் மீது இளம்பெண் பாலியல் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் வீரசிகாமணி அருகே அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி சிவகுருநாதன் (வயது 39). இவர் அரியநாயகிபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். அந்த பெண் தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி காசி சிவகுருநாதனிடம் கூறியுள்ளார்.
இதுதொடர்பான விசாரணைக்கு புளியங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று வரும்போது காசி சிவகுருநாதன் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சேர்ந்தமரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் விசாரணை நடத்தி, வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்.