மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தொல்லை

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ஜூலியஸ் ரவிச்சந்திரன் (வயது 54). இவர் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாக புகார் வந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் தரப்பில் மேற்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஆங்கில ஆசிரியர் ஜெயபால் ஆகியோர் மீது கடந்த வாரம் ராமநாதபுரம் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரை தொடர்ந்து போலீசார் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவினர் ரகசிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தலைமை ஆசிரியர் கைது

இதைத்தொடர்ந்து நயினார் கோவில் போலீசார், தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரையும், உடந்தையாக இருந்த ஆங்கில ஆசிரியர் ஜெயபாலையும் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியரை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவிட்டார். தலைமை ஆசிரியர் நெல்லையில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தனிப்படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

இதையடுத்து நெல்லை பெரியகுளம் அன்பு நகர் பகுதியில் உள்ள வீட்டில் இருந்த ஜூலியஸ் ரவிச்சந்திரனை நேற்று போலீசார் கைது செய்து நயினார் கோவில் அழைத்து வந்தனர்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி போக்சோ வழக்கில் கைதாகி உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதன்மை கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story