ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை
ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்
பாலியல் தொல்லை
சென்னையை சேர்ந்த 23 வயதுடைய தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் தனது பெற்றோருடன் கடந்த 28-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் தனது சித்தி வீட்டிற்கு திருவிழாவிற்காக வந்திருந்தார். பின்னர் திருவிழா முடிந்து அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். இந்த நிலையில் அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட்டை தாண்டி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் அந்த பெண்ணுக்கு பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
கைது
இதனை சுதாரித்து கொண்ட அந்த பெண் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே பஸ் வரும் போது போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் அவசர அழைப்பு எண்ணான 100-ஐ தொடர்பு கொண்டு புகார் கொடுத்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் பெரம்பலூரில் இருந்து நான்கு ரோடு சென்று கொண்டிருந்த அந்த பஸ்சை நிறுத்தி, அந்த நபரை கையும், களவுமாக பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருச்சி மலைக்கோட்டை, சங்கிலி கோனார் சந்து பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கோதண்டராமன் (வயது47) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோதண்டராமனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.