சிறுமிக்கு பாலியல் தொல்லை:டிரைவருக்கு 5 ஆண்டு ஜெயில்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டிரைவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடம்பூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான டிரைவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சிறுமிக்கு பாலியல்தொல்லை
கடம்பூர் அருகே உள்ள தெற்கு சிந்தலக்கட்டை காலனி தெருவை சேர்ந்தவர் எட்வர்டு ராஜ். இவருடைய மகன் கனிராஜ் (வயது 23). டிரைவர். இவர் கடந்த 2.9.2018 அன்று 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கனிராஜை கைது செய்தனர்.
5 ஆண்டு ஜெயில் தண்டனை
இவர் மீது வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.சுவாமிநாதன் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட கனிராஜிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.