கலாசேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கல்லூரி வளாகத்துக்குள் நுழைய 3 பேராசிரியர்களுக்கு தடை


கலாசேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கல்லூரி வளாகத்துக்குள் நுழைய 3 பேராசிரியர்களுக்கு தடை
x

கலாசேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் புகாருக்கு உள்ளான 3 பேராசிரியர்களை கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என கல்லூரி இயக்குனருக்கு மாநில மகளிர் ஆணைய தலைவி உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை,

சென்னை திருவான்மியூரில் கலாசேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் பலருக்கும் பேராசிரியர்கள், உதவி நடன ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமரி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகளிடம் அவர் எழுத்துப்பூர்வமாக பல்வேறு தகவல்களை திரட்டினார்.

மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாக கலாசேத்ரா இயக்குனரான ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி ஆகியோரிடம் விசாரணை நடத்த மகளிர் ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி, ரேவதி ராமச்சந்திரன், பத்மாவதி மற்றும் பாலியல் புகாருக்கு உள்ளாகும் மாணவிகள் புகார் அளிப்பதற்காக கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள உள்ளீட்டு புகார் குழு (ஐ.சி.சி. எனப்படும் இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி) உறுப்பினர் உமாமகேஸ்வரி ஆகியோர் சென்னை சேப்பாக்கம் கலசமகாலில் உள்ள மகளிர் ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜராகினர்.

ஆணையம் கேள்வி

அப்போது அவர்களிடம், கலாசேத்ரா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உள்ளீட்டு புகார் குழு செயல்படும் விதம் குறித்தும், பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகள் அந்தக்குழுவில் புகார் ஏதேனும் அளித்து உள்ளார்களா? என்பது குறித்தும் ஆணைய தலைவி குமரி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

அவர்கள் அளித்த பதிலை ஆணையம் பதிவு செய்து கொண்டது. சுமார் 45 நிமிடம் அவர்களிடம் விசாரணை நடந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதன்பின்பு ஆணையத்தின் தலைவி குமரி நிருபர்களிடம் கூறியதாவது:-

கலாசேத்ரா கல்லூரியில் மாணவிகள் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள உள்ளீட்டு புகார் குழு முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், அந்த கமிட்டியில் மாணவிகள் பாலியல் புகார் ஏதேனும் அளித்து உள்ளார்களா? என்றும் கேள்வி எழுப்பினேன்.

தற்போது மாணவிகள் புகார் அளித்துள்ள பேராசிரியர் உள்ளிட்டோர் மீது உள்ளீட்டு புகார் குழுவில் எந்தவித புகாரும் பெறப்படவில்லை என்றும், இதற்கு முன்பாக 3 புகார்கள் வந்துள்ளதாகவும் கமிட்டியின் உறுப்பினர் தெரிவித்தார்.

உள்ளீட்டு புகார் குழு தொடர்பான ஆவணங்களை கேட்டுள்ளேன்.

நேரடி தேர்வு

இந்த ஆவணங்களை யாரிடமாவது கொடுத்து அனுப்பினால் போதும் என்றும், நேரில் வர தேவையில்லை என்றும் அறிவுறுத்தி உள்ளேன்.

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தி உள்ளேன். மாணவிகளுக்கு ஆன்லைன் தேர்வு பிடிக்கவில்லை. நேரடி தேர்வையே விரும்புகிறார்கள் என்று கலாசேத்ரா இயக்குனரிடம் தெரிவித்தேன். அதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து மாணவிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்.

கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது

பாலியல் புகாருக்கு உள்ளான நடன ஆசிரியர்கள் 3 பேரை கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளேன்.

உள்ளீட்டு புகார் குழுவை பலப்படுத்த வேண்டும் என்றும், இந்தக்குழு குறித்து மாணவிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story