பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்சோவில் கைது


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்சோவில் கைது
x

முகப்பேரில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளிடம் தொடர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் ராமசாமி (வயது 45). இவர் முகப்பேரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்ததால், ஸ்ரீதர் தான் வகுப்பு எடுத்த பள்ளி மாணவிகளின் செல்போன் எண்கள் அனைத்தையும் அவரது செல்போனில் சேமித்து வைத்திருந்தார். இந்த நிலையில், அவர் மாணவிகளுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவிகளை படிப்புக்கு தொடர்பு இல்லாமல் அடிக்கடி செல்போனில் அழைத்து பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் நேரடி வகுப்புகள் தொடங்கியதையடுத்து, அவரின் அத்துமீறல்கள், சீண்டல்கள் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

பாலியல் சீண்டல்

ஆசிரியரின் அத்துமீறல்களை வெளியே சொன்னால் படிப்பு பாதிக்கப்படுவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடுமோ? என்ற அச்சத்தில் மாணவிகள் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்ததாகவும் தெரிகிறது. தற்போது பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் ஆசிரியர் ஸ்ரீதர் ராமசாமியால் பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் நல அலுவலரிடம் துணிச்சலுடன் முறையிட்டனர். அதன்படி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

போக்சோவில் கைது

இதையடுத்து அவர் மீது போலீசார் போக்சோ பிரிவு உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளுக்கு அனுப்பிய வாட்ஸ்-அப் உரையாடல்கள் மற்றும் ஆடியோக்கள் சமூகவலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெற்றோரிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆசிரியரின் செல்போனை பறிமுதல் செய்து வேறு ஏதாவது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா? என சோதனை செய்து வருகின்றனர்.


Next Story