25 சதவீத இடஒதுக்கீட்டில் குலுக்கல்முறையில் மாணவர் சேர்க்கை


25 சதவீத இடஒதுக்கீட்டில் குலுக்கல்முறையில் மாணவர் சேர்க்கை
x

தஞ்சை மாவட்டத்தில் 249 பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை வருகிற 23-ந் தேதி நடக்கிறது.

தஞ்சாவூர்


தஞ்சை மாவட்டத்தில் 249 பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை வருகிற 23-ந் தேதி நடக்கிறது.

மாணவர் சேர்க்கை

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டம்-2009 பிரிவின்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி.யில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு சேர்க்கை செய்யப்படுகிறது. இந்த குழந்தைகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 249 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 2,922 இடங்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இணையதளம் வழியாக 4,963 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதியில் செயல்படும் 249 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் வருகிற 23-ந் தேதி 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் முதன்மைக்கல்வி அலுவலரால் நியமிக்கப்படும் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தகவல் பலகை

தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் இணையதளம் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையில் 24-ந் தேதி வெளியிடப்படும். இப்படி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 29-ந் தேதி சேர்க்க வேண்டும்.

2023-24-ம் கல்வியாண்டிற்கு 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு வகுப்பான எல்.கே.ஜி. மற்றும் முதல் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்த அனைத்து பெற்றோர்களும் 23-ந் தேதி காலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story