சக்தி முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி விழா
சிவகாசி சக்தி முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி விழா நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பஞ்சாயத்து முத்துராமலிங்கபுரம் காலனியில் உள்ள ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது. முன்னதாக காலை அம்மன் சிங்க வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் விரதம் இருந்த பக்தர்கள் வரிசையாக பூக்குழி இறங்கினர். சிவகாசி தீயணைப்பு நிலையம் சார்பில் பூக்குழி நிகழ்ச்சியின் போது விபத்து ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சிவகாசி கிழக்கு போலீசார் 30-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பக்தர்களை வரிசைப்படுத்தி பூக்குழி இறங்க அனுமதித்தனர். மாலை 3 மணிக்கு பூக்குழி நிகழ்ச்சி முடிந்த பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிகேஷம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.