பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தால் சரிவை சந்தித்த ஷேர் ஆட்டோ தொழில்


பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தால் சரிவை சந்தித்த ஷேர் ஆட்டோ தொழில்
x

அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால் ஷேர் ஆட்டோ தொழில் சரிவை சந்தித்ததாக டிரைவர்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.

திண்டுக்கல்

அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால் ஷேர் ஆட்டோ தொழில் சரிவை சந்தித்ததாக டிரைவர்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.

மக்கள் பயணம்

உணவு தேடலுக்காக ஆதிமனிதன் தனது முதல் பயணத்தை தொடங்கினான். ஆதிகாலத்தில் தொடங்கிய பயணத்தின் பட்டியல் தற்போது நீண்டு கொண்டே செல்கிறது. உணவு, வேலை, உறவுகளை சந்தித்தல், பொழுதுபோக்கு என்று பல காரணங்களுக்காக மக்கள் பயணம் செல்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் வீடுகள் தோறும் இருசக்கர வாகனங்கள், நடுத்தர குடும்பத்தில் கார் என வசதி பெருகிவிட்டன. எத்தனை வசதி இருந்தாலும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் அதிகமாக உள்ளனர். அதில் நீண்ட தூர பயணத்துக்கு ரெயில் மற்றும் பஸ்களிலும், அவசர தேவைக்கு வாடகை கார், ஆட்டோக்களிலும் மக்கள் செல்கின்றனர்.

ஷேர் ஆட்டோ

இதில் ஷேர் ஆட்டோக்களை பொறுத்தவரை பஸ் வசதி அதிகம் இல்லாத பகுதிகளில் இயக்கப்படுகின்றன. இந்த ஷேர் ஆட்டோக்களில் ஏறும் ஒவ்வொரு நபரும் தனித்தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் மினி பஸ் போன்று செயல்பட்டு வருகிறது. முன்பெல்லாம் நகரங்களில் மட்டுமே இயக்கப்பட்ட ஷேர் ஆட்டோக்கள் தற்போது கிராமங்களுக்கு இடையேயும் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதில் திண்டுக்கல் நகரில் ஷேர் ஆட்டோக்கள், மினிவேன்கள் என 300-க்கும்மேற்பட்ட வாகனங்கள் இயங்குகின்றன. பஸ்சுக்காக காத்திருக்கும் நேரத்தில் ஷேர் ஆட்டோவில் சென்று விடலாம் என்பதால் பலரும் விரும்பி பயணம் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர்.

தொழில் பாதிப்பு

மேலும் காலை, மாலை நேரங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களை விட ஷேர் ஆட்டோக்களே பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. இதனால் திண்டுக்கல் உள்பட பல ஊர்களில் ஷேர் ஆட்டோ ஓட்டும் தொழில் மிகவும் பிசியாக இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஷேர் ஆட்டோக்கள் ஒன்றிரண்டு பயணிகளுடன் செல்கின்றன.

ஒருசில நேரங்களில் மட்டுமே ஷேர் ஆட்டோக்களில் பயணிகளை பார்க்க முடிகிறது. பஸ் நிறுத்தத்தில் ஷேர் ஆட்டோக்கள் பயணிகளுக்காக காலியாக நிற்பதையும் பார்க்க முடிகிறது. ஷேர் ஆட்டோ ஓட்டும் தொழில் சில மாதங்களாக சரிவை சந்தித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இலவச பயணத்தால் சரிவு

இதுகுறித்து ஷேர்ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

சுந்தரபாண்டி (டிரைவர், திண்டுக்கல்) :- ஷேர் ஆட்டோக்களை பலரும் வாடகைக்கு ஓட்டுகிறோம். பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. எனினும் மக்கள் ஆதரவால் ஷேர் ஆட்டோ தொழில் ஓரளவு வருமானத்தை கொடுத்தது. இதற்கிடையே பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயண திட்டத்தை அறிவித்தது. இதனால் பெண்கள் காத்திருந்து இலவச பஸ்சில் செல்கின்றனர். ஷேர் ஆட்டோக்களுடன் நாங்கள் காத்திருந்தாலும் கண்டுகொள்வதில்லை. ஷேர் ஆட்டோ தொழில் கடுமையாக பாதித்து இருக்கிறது.

அழகுராஜ் (டிரைவர், திண்டுக்கல்) :- ஷேர் ஆட்டோக்களில் பெண்களே அதிக அளவில் பயணம் செய்து வந்தனர். ஆனால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கொண்டு வந்ததால் தொழில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஒன்றிரண்டு ஆட்கள் தான் பயணிக்கின்றனர். எரிபொருள் விலை உயர்வு, பயணிகள் வருகை குறைவால் வருமானம் சரிவை சந்தித்துள்ளது. இதனால் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.20 நிர்ணயித்து இருக்கிறோம். அதுவும் கட்டுபடியாகவில்லை.

வீரக்குமார் (டிரைவர் கன்னியாபுரம்) :- ஆண்கள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் செல்வதால், பெண்களை ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர். எரிபொருள் விலை, வாகன தகுதி சான்று கட்டணம், காப்பீடு தொகை, உதிரிபாகம் விலை ஆகியவற்றின் உயர்வால் தொழிலை சிரமத்துடன் நடத்தினோம். தற்போது பெண்கள் இலவசமாக அரசு பஸ்சில் பயணிப்பதால் தொழிலில் வருமானம் இல்லை. பலர் ஆட்டோவை விற்றுவிட்டு வேறு வேலைக்கு சென்று விட்டனர்.

கட்டணத்தை குறைக்கலாம்

ஜெயந்தி (இல்லத்தரசி) :- நான் கோபால்பட்டியில் டெய்லர் கடை வைத்துள்ளேன். இதற்காக அரசு டவுன் பஸ்சில் இலவசமாக செல்கிறேன். எனினும் அதிக நேரம் ஷேர் ஆட்டோவில் தான் பயணிக்கிறேன். அதில் கோபால்பட்டியில் இருந்து தி.வடுகபட்டிக்கு 2 கி.மீ. தூரத்துக்கு பகலில் ரூ.15-ம், இரவில் ரூ.20-ம் கட்டணமாக வசூலிக்கின்றனர். பஸ்சை விட கட்டணம் கூடுதலாக இருந்தாலும் நினைத்த நேரத்தில் செல்லலாம் என்பதால் ஷேர்ஆட்டோவில் பயணிக்கிறேன்.

பவித்ரா (கல்லூரி மாணவி வாடிப்பட்டி) :- திண்டுக்கல்லில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள கல்லூரிக்கு செல்ல ரூ.20 கட்டணமாக வசூலிக்கின்றனர். குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதால் ஆட்டோவில் செல்கிறோம். கட்டணத்தை குறைத்தால் நன்றாக இருக்கும். கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

சீனிவாசன் (தொழிலாளி, அரசனம்பட்டி) :- திண்டுக்கல்லில் இருந்து இரவு நேரத்தில் அரசனம்பட்டிக்கு செல்வதற்கு ரூ.30-ம், குமாரபாளையத்துக்கு ரூ.40-ம் ஷேர் ஆட்டோக்களில் வசூலிக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த வேண்டும். அரசு பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும்.

பிரதீஷ் (கல்லூரி மாணவர், ஒட்டன்சத்திரம்) :- ஷேர் ஆட்டோக்கள், மினிவேன்களில் பஸ்களை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர். கல்லூரிக்கு வந்து செல்வதற்கு ஷேர் ஆட்டோவுக்கு மட்டும் ரூ.40 கொடுக்க வேண்டியது இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story