தாளவாடி அருகே தொட்டியில் தண்ணீர் குடித்தபோது மயங்கி விழுந்து 5 ஆடுகள் சாவு
தாளவாடி அருகே தொட்டியில் தண்ணீர் குடித்தபோது 5 ஆடுகள் மயங்கி விழுந்து இறந்தன.
தாளவாடி
தாளவாடி அருகே தொட்டியில் தண்ணீர் குடித்தபோது 5 ஆடுகள் மயங்கி விழுந்து இறந்தன.
5 ஆடுகள் சாவு
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள காமையன்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா. விவசாயி. இவர் தனது வீட்டில் 3 மாடுகளையும், 7 ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இவற்றை வழக்கம் போல தனது வீடு அருகே உள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விடுவார்.
அதேபோல் நேற்று காலை மல்லிகார்ஜுனா கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு சென்றுவிட்டார். மேலும் கால்நடைகள் குடிப்பதற்காக மல்லிகார்ஜுனா அங்குள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பியிருந்தார். அந்த தண்ணீரை 5 ஆடுகள் மட்டும் குடித்துள்ளன. அப்போது ஒன்றன் பின் ஒன்றாக அவை மயங்கி கீழே விழுந்தன. இதில் சிறிது நேரத்தில் 5 ஆடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இதை பார்த்த மல்லிகார்ஜுனா அதிர்ச்சி அடைந்தார்.
விஷம் கலந்தனரா?
உடனே இதுபற்றி சிமிட்டஹள்ளி கால்நடை டாக்டர் அபினேசுக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அவர் அங்கு வந்து ஆடுகளின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் ஆடுகளின் உடற்கூறுகள் பரிசோதனைக்காக கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அறிந்ததும் தாளவாடி போலீசார் அங்கு சென்று ஆடுகளின் உடல்களை பார்வையிட்டனர். மேலும் தொட்டியில் நிரப்பப்பட்ட தண்ணீரில் யாராவது மர்மநபர்கள் விஷம் கலந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தண்ணீர் குடித்த ஆடுகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.