கப்பல் ஊழியர் மர்ம சாவு
கப்பல் ஊழியர் மர்ம சாவு
கருங்கல்:
கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் கல்பொற்றவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் லெனின் (வயது 34). இவர் கப்பலில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் இருந்தார். சம்பவத்தன்று திட்டுவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழாவிற்கு காய்கறி வெட்டச் செல்வதாக கூறி சென்றார். ஆனால் காலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் அவரை தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் கல்பொற்றவிளை பகுதியில் உள்ள சோபி என்பவரின் வீட்டு காம்பவுண்டுக்குள் 2 காதுகளிலும் ரத்தம் வழிந்த நிலையில், வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் லெனின் இறந்து கிடந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சோபியின் வீட்டு காம்பவுண்டுக்குள் லெனின் எப்படி வந்தார் எனவும், தவறி விழுந்து இறந்தாரா அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதும் காரணம் உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.