சென்னை-கன்னியாகுமரி கப்பல் போக்குவரத்து; கடல்வழி பயணம் காலத்தின் கட்டாயம்-பொதுமக்கள் கருத்து


சென்னை-கன்னியாகுமரி கப்பல் போக்குவரத்து; கடல்வழி பயணம் காலத்தின் கட்டாயம்-பொதுமக்கள் கருத்து
x

சென்னை-கன்னியாகுமரி கப்பல் போக்குவரத்து மூலம் கடல்வழி பயணம் காலத்தின் கட்டாயம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

கப்பல்கள், படகுகள் மூலமாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடல் வழியாக செல்லும் போக்குவரத்து உள்நாட்டு அளவில் அதிக பயன்பாடுகள் இல்லாமல் இருந்தாலும், சர்வதேச அளவில் மிக முக்கியப் போக்குவரத்தாக இருக்கிறது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், துத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். சென்னை துறைமுகம் வழியாக கார், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், ரசாயனங்கள், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் மற்றும் பொறியியல் எந்திரங்களின் உதிரி பாகங்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அதேபோல், உணவுப் பொருட்கள், உரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை முக்கிய இறக்குமதி செய்யப்படுகின்றன.எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் மூலம் நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், வேதியியல் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. வ.உ.சி. துறைமுகம் மூலம் உணவு, மாட்டுத் தீவனம், கனிமங்கள், சமையல் எண்ணெய், சிமெண்ட் போன்றவை கையாளப்படுகின்றன.

பயணிகள் கப்பல்

துறைமுகங்கள் மூலம் சரக்கு போக்குவரத்து நடந்து வந்தாலும், பயணிகள் போக்குவரத்து இதுவரை தமிழ்நாட்டில் சாத்தியப்படாமலே இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது, சென்னை, புதுச்சேரி, காரைக்கால் வழியாக கன்னியாகுமரிக்கு மிதவைப் படகு (ஹோவர்கிராப்ட்) போக்குவரத்தை தொடங்கத்திட்டம் தீட்டினார். இதுதொடர்பாக ஜப்பானில் உள்ள நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. அதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த திட்டம் ஏனோ செயல் வடிவம் பெறவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் நலன் கருதி தற்போது பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் நிலையில், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தையும் நிறைவேற்றித் தரவேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் குரலாக இருக்கிறது.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பு மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

காலத்தின் கட்டாயம்

சென்னை பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைய அறக்கட்டளை தலைவர் ராஜலெட்சுமி கூறியதாவது:-

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஓடிசா, மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்கள் கடலோரத்தில் இருப்பதுடன், நதிகளும் இருப்பதால் அங்கு நீர் வழிப்போக்குவரத்து தொடங்குவது எளிது. அவை காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. நிலப்பரப்பில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை முற்றிலும் தடுப்பதற்காக நீர் வழி போக்குவரத்தை தொடங்குவது சிறந்ததாகும்.

சாலைப்போக்குவரத்துக்கு தேவையான சாலைகள் அமைக்க விவசாய நிலங்கள், நீர் வழித்தடங்கள் சேதப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால் குடிநீரும் பாதிக்கப்படலாம். எனவே கடல் மார்க்கமாக நீர் வழிப்போக்குவரத்து அமைப்பது நல்லது. நீர் வழிப்போக்குவரத்து மெதுவாக சென்றாலும், குறைந்த பொருள் செலவில் அதிக பொருட்களை கொண்டு செல்ல முடியும்.

வணிகம் மேம்படும்

ஆனந்தாசேட் (வணிகர், திண்டுக்கல்):- வணிகத்துக்கு பொருட்களை கொண்டு வருவதற்கு போக்குவரத்து தான் பெரும் இடையூறாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னை-கன்னியாகுமரி இடையே கடல்வழி போக்குவரத்து தொடங்கினால், வணிகத்துக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். வணிகர்கள் தேவையான பொருட்களை அதிக அளவில் கொள்முதல் செய்து கொண்டு செல்ல முடியும். வணிகத்தின் எல்லை மேலும் விரிவடையும். எனவே கடல்வழி போக்குவரத்தை தொடங்குவதில் மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.

குப்புசாமி (ஓய்வுபெற்ற அரசு அலுவலர், பழனி):- நீர்வழி போக்குவரத்து என்பது சங்ககாலம் தொட்டே மிகவும் தொன்மை வாய்ந்தது. இந்த நீர்வழி போக்குவரத்து தமிழகத்தில் முக்கியத்துவம் பெறாமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்கு உரியது. எனவே தமிழகத்தில் கிழக்கு கடற்கரையை மையப்படுத்தி நீர்வழி போக்குவரத்து தொடங்கினால் உலக அளவில் தமிழகம் சுற்றுலா வளர்ச்சியில் குறிப்பிட்ட இடத்தை பெறும். குறிப்பாக ஆன்மிக சுற்றுலா செல்பவர்களுக்கு சென்னை தொடங்கி புதுச்சேரி, பூம்புகார், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், உவரி, கன்னியாகுமரி என அனைத்து ஆன்மிக தலங்களையும் காண முடியும். இதனால் சுற்றுலா வளர்ச்சி அடைவதோடு கடல்சார்ந்த துறையும் வளரும். இதனால் வேலைவாய்ப்பு பெருகும். எல்லாவற்றுக்கும் மேலாக நீர்வழி போக்குவரத்தால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. எனவே இதில் கவனம் செலுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுலா வளர்ச்சி

சக்திவேல் (சுற்றுலா குழு ஒருங்கிணைப்பாளர், செந்துறை):- கடல் வழி போக்குவரத்து தொடங்கினால் சுற்றுலா வளர்ச்சி பெரிய அளவில் வளர்ச்சி அடையும். தமிழகத்தில் பல கடற்கரை நகரங்களில் முக்கிய வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ளன. இதனால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், ஆன்மிகவாதிகள் கடல்வழி போக்குவரத்தில் விரும்பி பயணிப்பார்கள். அதேநேரம் கடல்வழி போக்குவரத்தை பொறுத்தவரை அரசுக்கு அதிகப்படியான செலவு ஏற்படும். எனவே செலவை விட வருமானம் அதிகமாக இருந்தால், கடல்வழி போக்குவரத்தை தொடங்க அரசு முன்வரும்.

சந்திரா (குடும்ப தலைவி, மங்களம்பட்டி):- ஆன்மிக தலங்கள், சுற்றுலா இடங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே கடல்வழி போக்குவரத்தை தொடங்கினால் மிகவும் புதுமையான பயணமாக இருக்கும். மேலும் கடல்வழி போக்குவரத்தின் மூலம் பல்வேறு தொழில்களும் வளர்ச்சி பெறும். சென்னை-கன்னியாகுமரி இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்கினால் வணிகம், தொழில் மற்றும் சுற்றுலா பெரும் வளர்ச்சியை பெறும். சாலை, விமானம் என வழக்கமான பயணத்தை மேற்கொள்ளும் நபர்களுக்கு கப்பல் பயணம் புதிய அனுபவமாக இருக்கும். இதற்கு மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story