சிவன் கோவில் நிலம் மீட்பு
பந்தலூர் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட சிவன் கோவில் நிலம் மீட்கப்பட்டது.
பந்தலூர்,
பந்தலூர் அருகே நெல்லியாளம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் ராணி போரம்மா ஆட்சி செய்தார். அப்போது குன்றில்கடவு பகுதியில் சிவன் கோவிலை கட்டி, குடும்பத்தினருடன் வழிபட்டு வந்து உள்ளனர். காலப்போக்கில் பொதுமக்களும் வழிபட்டனர். இதற்கிடையே கோவில் நிலத்தை சிலர் ஆக்கிரமித்தனர். இதனால் நில அளவை செய்து ஆக்கிரமிப்பை அகற்றி, நிலத்தை மீட்க வேண்டும் என்று கோவில் கமிட்டி நிர்வாகிகள் பந்தலூர் தாசில்தார் நடேசனிடம் மனு கொடுத்தனர். இதைதொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் மேற்பார்வையில் நில அளவையாளர்கள் மனோஜ்குமார், செந்தில்கண்ணன் ஆகியோர் கோவில் கமிட்டியினர் முன்னிலையில் நில அளவீடும் பணி நடந்தது. பின்னர் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த 83 சென்ட் நிலத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதையொட்டி தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.