சிவராத்திரி சிறப்பு பூஜை


சிவராத்திரி சிறப்பு பூஜை
x

மதுரையில் சிவராத்திரியையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது

மதுரை

அவனியாபுரம்

அவனியாபுரம் பகுதியில் திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் கல்யாண சுந்தரேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். மேலும் மீனாட்சிஅம்மன் சிறுவயதில் விளையாடிய தலம் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

இக்கோவிலில் சிவராத்திரியையொட்டி கல்யாண சுந்தரேசுவரருக்கு இரவு முழுவதும் 4 கால பூஜைகளும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக சனி பிரதோஷ வழிபாடும் நடந்தது. இதையொட்டி உற்சவர் ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதேபோல் வாடிப்பட்டி அருகே சத்திரவெள்ளாளப்பட்டியில் உள்ள வாலகுருநாதன் சாமி கோவிலில் சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி அழகர்கோவில் தீர்த்தமாடுதல், அன்னதானம், குருநாதன்சாமி, அங்காள ஈஸ்வரி அம்மனும் கோவிலுக்கு புறப்படுதல், வாணவேடிக்கை, கருப்பசாமி வேட்டை சாட்டுதல், பேச்சியம்மன் படையல், பொங்கல் வைத்தல், கிடாய்வெட்டுதல், வாலகுருசாமி, அங்காளஈஸ்வரி கோவில் வீட்டுக்கு சென்றடைதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலூர் அடுத்த திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் சிறப்பு அலங்காரத்துடன் திருமறைநாதர் அருள்பாலித்தார். நரசிங்கம்பட்டி பறைபுலியன் கோவில், பூதமங்கலம் இடவாறப்பாறை மீதுள்ள வாளை கருப்பு சுவாமி கோவில், மதுரை எஸ்.வி.பி. நகர் ஆலங்குளத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவில், மதுரை வெள்ளியம்பலத்தெரு சிவன் கோவிலில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அலங்காநல்லூர் அய்யப்பன் கோவில் உள் பிரகாரத்தில் சிவன்-பார்வதி சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது.


Next Story