பொக்லைன் எந்திரம் மீது விழுந்த மின்மாற்றியால் பரபரப்பு
விக்கிரமசிங்கபுரம் அருகே பொக்லைன் எந்திரம் மீது விழுந்த மின்மாற்றியால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தை அடுத்த அம்பலவாணபுரத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அங்கு சாலையோரம் இருந்த மின்மாற்றியை கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றி, சற்று ஓரமாக நட்டினர். இந்த நிலையில் அந்த மின்மாற்றி சற்று சாய்ந்தவாறு இருந்ததால், அதனை தாங்கு கம்பியால் இழுத்து நேராக அமைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். இதற்காக நேற்று காலையில் அந்த மின்மாற்றியின் அருகில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.
அப்போது திடீரென்று பொக்லைன் எந்திரம் மீது மின்மாற்றி உயரழுத்த மின்கம்பிகளுடன் சரிந்து விழுந்தது. அப்போது பொக்லைன் ஆபரேட்டர் லாவகமாக வெளியே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உடனே மின்வாரிய ஊழியர்கள் மின்இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து சரிந்த மின்மாற்றியை சாலையோரமாக மாற்று இடத்தில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பலவாணபுரத்தில் சாலை விரிவாக்க பணியின்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற பா.ஜ.க. பிரமுகர் மீது மரம் சரிந்து விழுந்தது. எனவே சாலை விரிவாக்க பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.