ஆசிரியை இறந்த அதிர்ச்சியில் மகள் மயங்கி விழுந்து சாவு
இரணியலில் ஆசிரியை இறந்த துக்கம் தாங்காமல் மகள் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
திங்கள்சந்தை,
இரணியலில் ஆசிரியை இறந்த துக்கம் தாங்காமல் மகள் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
ஓய்வு பெற்ற ஆசிரியை
திங்கள்சந்தை அருகே உள்ள ஆலன்கோடு பகுதியை ேசர்ந்தவர் வேலம்மாள் (வயது 78). ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவருக்கு செல்வி என்கிற பகவதி அம்மாள் (57) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
பகவதி அம்மாளுக்கு ராதாகிருஷ்ணன் (58) என்ற கணவரும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இரணியல் காற்றாடிமுக்கு சந்திப்பில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுடன் வேலம்மாளும் தங்கி இருந்தார்.
இந்தநிலையில் வேலம்மாள் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் இறந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று மதியம் 1.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.
இதையடுத்து நேற்று காலை முதல் உறவினர்கள் துக்கம் விசாரிக்க வீட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அப்போது பகவதி அம்மாள் தாயின் உடல் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டே இருந்தார்.
மயங்கி விழுந்தார்
இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் பகவதி அம்மாள் திடீெரன மயங்கி விழுந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைக்கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டில் ஏற்கனவே இறந்த தாயின் உடல் தகனம் செய்ய இருந்த நிலையில் மகளும் இறந்த தகவல் அறிந்து குடும்பத்தினர் மிகவும் சோகம் அடைந்தனர்.
தொடர்ந்து மகளின் உடல் ஏற்கனவே வீட்டில் இருந்த தாயின் உடல் அருேக கொண்டு வந்து வைக்கப்பட்டது. இது காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. தொடர்ந்து நேற்று மதியம் தாய் வேலம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மகன் வெளிநாட்டில் வேலை
மகள் பகவதி அம்மாளின் மகன் அஜித் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தாயும், பாட்டியும் இறந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் வந்த பின்பு பகவதி அம்மாளின் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகள் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்ைத ஏற்படுத்தியுள்ளது.