கூடலூரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்: முதல் திருமணத்தை மறைத்து என்ஜினீயரை கரம் பிடித்த பெண்
கூடலூரில், முதல் திருமணத்தை மறைத்து என்ஜினீயரை பெண் ஒருவர் கரம் பிடித்தார். 3-வதாக இன்னொருவரை மணந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
செல்போனில் பேச்சு
தேனி மாவட்டம் கூடலூர் 4-வது வார்டு கருப்புசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய் போஸ் (வயது 32). என்ஜினீயர். அவருடைய மனைவி வித்யா (30). இவர்களுக்கு, கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு, 7 வயதி்ல் மகன் உள்ளான்.
இந்தநிலையில் வித்யா, தனது மகனை கவனிக்காமல் அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜய் போஸ், வித்யாவை கண்டித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை.
இதற்கிடையே செல்போனில் அடிக்கடி பேசுவது தொடர்பாக வித்யாவின் உறவினர் ஒருவரிடம் விஜய்போஸ் கூறியிருக்கிறார். அப்போது அவர், வித்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன குண்டை தூக்கி போட்டார்.
3-வது திருமணம்
கடந்த 2010-ம் ஆண்டில் வித்யாவுக்கு ஒருவருடன் திருமணம் நடந்ததாகவும், கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதாகவும் வித்யாவின் உறவினர் விஜய்போசிடம் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், முதல் திருமணத்தை மறைத்து தன்னை 2-வதாக திருமணம் செய்தது குறித்து வித்யாவிடம் கேட்டார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் வித்யா கோபித்துகொண்டு, மதுரையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதற்கிடையே கடந்த மே மாதம் 15-ந்தேதி வித்யாவுக்கு, கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த முரளி என்பவருடன் 3-வதாக திருமணம் நடந்த தகவல் விஜய்போசுக்கு தெரியவந்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதை போல விஜய்போஸ் வேதனை அடைந்தார்.
5 பேர் மீது வழக்கு
இது தொடர்பாக விஜய் போஸ் குடும்பத்தினர், வித்யா வீட்டிற்கு சென்று விவரம் கேட்டனர். அப்போது இதைப்பற்றி கேட்டால், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக போலீசில் புகார் கொடுத்து விடுவோம். விஜய்போசை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விஜய் போஸ் புகார் செய்தார். அதன்பேரில் வித்யா, அவரது தந்தை சுகுமாறன், தாய் சித்ரா, தம்பி சரண்குமார் மற்றும் முரளி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் திருமணத்தை மறைத்து என்ஜினீயரை கரம் பிடித்த பெண், 3-வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.