தேய்ந்து வரும் செருப்பு தைக்கும் தொழில்


தேய்ந்து வரும் செருப்பு தைக்கும் தொழில்
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போதிய வருமானம் இல்லாததால் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் தற்போது மாற்று தொழிலுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை

காரைக்குடி,

போதிய வருமானம் இல்லாததால் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் தற்போது மாற்று தொழிலுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேய்ந்து வரும் செருப்பு தைக்கும் தொழில்

அறிவியல் வளர்ச்சி அதிகரிக்கும் வேளையில் பல்வேறு முன்னேற்றங்கள் வந்தாலும் கூட மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறையும் மாறி வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் கைகளில் உலகம் குறித்த முழு தகவல்கள் வந்து செல்லும் வகையில் பல்வேறு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு வகையில் வளர்ச்சி அடைந்தாலும் கூட மறுவேளையில் சிறு, சிறு தொழிலாளர்களின் வாழ்க்கையும், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக பல்வேறு இடங்களில் உள்ள பஸ் நிலையங்களில் செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் நிலைமையும் அதில் ஒன்றாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கூடும் இடம், பஸ்நிலையம் ஆகியவற்றில் 30-க்கும் மேற்பட்ட செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வந்தனர்.

ஆனால் காலப்போக்கில் தற்போது விரல் விட்டு எண்ணும் அளவில் இந்த தொழிலாளர்கள் பஸ் நிலையங்களில் அன்றாட வருமானத்திற்காக பல மணிநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் செருப்பு தைக்கும் தொழிலும் தேய்ந்து வருகிறது. இதற்கு காரணம் தற்போதைய இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் அணியும் செருப்புகளில் சிறிய கிழிசல் வந்தால் கூட அவற்றை தூக்கி எறிந்து விட்டு புதிய செருப்புகளை வாங்கி அணிந்து செல்கின்றனர். இதன் காரணமாக தற்போது பஸ்நிலையங்களில் இந்த தொழிலை மேற்கொண்டு வரும் தொழிலாளர்கள் போதிய வருமானம் இல்லாமல் வீடு திரும்பி செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பஸ்நிலையங்களில் இந்த தொழிலை செய்து வரும் தொழிலாளர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு.

அன்றாட பிழைப்பு

ராமு (காரைக்குடி):- கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலை செய்து வருகிறேன். இதற்கு முந்தைய காலங்களில் தினந்தோறும் 200 முதல் ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். ஆனால் தற்போது தினந்தோறும் ரூ.100 கிடைப்பதே பெரும் சிரமமாக உள்ளது. அதற்கு காரணம் இன்றைய இளைஞர்கள் அணியும் செருப்பு அல்லது ஷூ ஆகியவற்றில் ஏதாவது கிழிசல் வந்தாலும் கூட அவற்றை எடுத்து வர தயக்கம் அடைந்து தூக்கி எறிந்து விட்டு புதிய செருப்பு மற்றும் ஷூ வாங்கி அணிகின்றனர். இதனால் எங்களது அன்றாட பிழைப்பிற்கு வழியில்லாமல் தவித்து வருகிறோம் என்றார்.

முனியாண்டி (திருப்பத்தூர்):- கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்கள் அணிந்திருந்த செருப்புகள் பிய்ந்தாலோ அல்லது கிழிந்தாலோ உடனடியாக எங்களை தேடி வந்து அதை சரி செய்து விட்டு செல்வார்கள். அப்போது நாள் ஒன்றுக்கு தேவையான வருமானம் கிடைத்து வந்தது. தற்போது தங்கள் அணிந்திருந்த செருப்பு அறுந்தால் கூட எங்களிடம் வர கூச்சமடைந்து அவற்றை தூக்கி எறிந்து விட்டு உடனடியாக புதிய செருப்புகளை வாங்கி அணிகின்றனர். இதனால் அன்றாட செலவுக்கு கூட வருமானம் வருவதில்லை. இதனால் இதற்கு முன் இந்த தொழிலை நம்பியிருந்த ஏராளமான தொழிலாளர்கள் இன்று மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர் என்றார்.

மாற்று தொழில்

சின்னச்சாமி (சிங்கம்புணரி):- சிங்கம்புணரி பஸ்நிலையத்தில் 50 ஆண்டுகளாக இந்த தொழில் செய்து வருகிறேன். தற்போது ரூ.100 வரை செருப்பு விலை உள்ளதால் செருப்பு அறுந்தால் யாரும் எங்களிடம் வருவதில்லை. அதற்கு பதிலாக புதிய செருப்பை வாங்கி செல்கின்றனர். அப்படி யாராவது இங்கு வந்தால் கூட எங்களிடம் வேலை முடிந்த பின்னர் நாங்கள் ரூ.10 கேட்டால் கூட அவர்கள் ரூ.5 தான் தருவோம் என பேரம் பேசுகின்றனர். இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் தற்போது கார்த்திகை, மார்கழி, தை மாத சீசன்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மணி கோர்க்கும் தொழிலை செய்து வருகின்றனர். என்னை போன்ற ஒரு சிலர் மட்டும் இந்த தொழிலை செய்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story