தங்கும் விடுதியில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதியில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார். பாதுகாப்பு பணிக்கு வந்த இடத்தில் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதியில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார். பாதுகாப்பு பணிக்கு வந்த இடத்தில் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 50). போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாதுகாப்பு பணிக்காக தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வந்திருந்தார்.
இவர்கள் பழைய குற்றாலம் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வெவ்வேறு அறைகளில் தங்கி இருந்தனர்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நேற்று காலை சுமார் 6 மணி அளவில் பார்த்திபன் தங்கி இருந்த அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து அந்த விடுதியின் பணியாளர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையின் கழிவறையில் பார்த்திபன் மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக குற்றாலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
குடும்ப பிரச்சினை காரணமா?
பின்னர் பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
இந்த சம்பவம் குறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிடம் கேட்டபோது, 'பார்த்திபன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம். எனினும் தற்கொலைக்கான முழு காரணம் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்' என்று கூறினார்.
பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குற்றாலத்தில் துப்பாக்கியால் சுட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.