துப்பாக்கி சுடும் போட்டி; நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முதலிடம்


துப்பாக்கி சுடும் போட்டி; நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முதலிடம்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வல்லநாட்டில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் முதலிடம் பிடித்தார்.

தூத்துக்குடி

வல்லநாட்டில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் முதலிடம் பிடித்தார்.

துப்பாக்கி சுடும் போட்டி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நேற்று நெல்லை சரக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலை வகித்தார்.

போட்டியில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சிப்பள்ளி போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் (தென்காசி) மணிமாறன், (ஆலங்குளம்) பொன்னரசு, (சங்கரன்கோவில்) சுதீர், (புளியங்குடி) அசோக், நெல்லை மேலப்பாளையம் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப், நெல்லை மாநகர சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை சூப்பிரண்டு திருமலை, வள்ளியூர் துணை சூப்பிரண்டு யோகேஷ் குமார், நெல்லை ஊரக துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டி.ஐ.ஜி. முதலிடம்

இதில் இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் பிரிவுக்கான போட்டியிலும், பிஸ்டல் ரக துப்பாக்கி சூடு போட்டியிலும் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் முதல் இடம் பிடித்தார். சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு சுதீர் 2-வது இடம் பிடித்தார். புளியங்குடி துணை சூப்பிரண்டு அசோக் இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் 3-வது இடத்தையும், நெல்லை மேலப்பாளையம் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும்போட்டியில் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் முதல் இடத்தையும், சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு சுதீர் 2-வது இடத்தையும், நெல்லை மேலப்பாளையம் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் 3-வது இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம், ஆயுதப்படை தலைமைக் காவலர் ராஜா உள்ளிட்ட போலீசார் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கமாண்டோ படை பிரிவு இன்ஸ்பெக்டர் விவேக், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story