ஆத்தூரான் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி ஆத்தூரில் கடையடைப்பு போராட்டம்


ஆத்தூரான் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி ஆத்தூரில் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரான் கால்வாயில் தண்ணீர் திறந்து விடக்கோரி ஆத்தூரில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் விவசாயிகள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் குளம் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கம் சார்பில், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து பாசனத்துக்கு ஆத்தூரான் கால்வாயில் தண்ணீர் திறந்து விடக்கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதையடுத்து விவசாயிகளிடம் அரசு தரப்பில் திருச்செந்தூரில் கடந்த 30-ந்தேதி பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து ஆத்தூர் மற்றும் தெற்கு ஆத்தூர் பகுதியில் நேற்று காலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் விவசாயிகள் ஆத்தூரில் உள்ள சங்க அலுவலகத்தில் குடும்பத்துடன் திரண்டனர். அவர்கள் அந்த பகுதியில் திடீரென சாலை மறியலுக்கு முயன்றனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து ஆத்தூர் குளம் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்க தலைவர் சி.பி.செல்வம் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகளுடன் பேசினர். அப்போது அவர்கள், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறினர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மதியம் 1.30 மணி அளவில் ஆத்தூருக்கு வந்தார். தொடர்ந்து, ஆத்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்ைத நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமணன், தாமிரபரணி கோட்ட பொதுப்பணித்துறை நிர்வாக அதிகாரி மாரியப்பன், உதவி நிர்வாக பொறியாளர் ஆதிமூலம், உதவி பொறியாளர் முருகன், போலீஸ் தரப்பில் தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வசந்தராஜ், மாயவன், ராமசுப்பு, விவசாயிகள் தரப்பில் ஆத்தூர் குளம் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்க தலைவர் சி.பி.செல்வம், செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொருளாளர் மாதவன், துணைத்தலைவர் வாசிங்டன், துணை செயலாளர் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது விவசாயிகள் தரப்பில், ஆத்தூரான் கால்வாயில் ஏற்கனவே திறப்பதாக கூறியதை விட கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும். தண்ணீர் திறந்து விடும் நாட்களை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் அதனை ஏற்றுக்கொள்ள இயலாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விவசாய சங்க பிரதிநிதிகள் அங்கிருந்து சென்று விட்டனர். சுமார் 1½ மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவசாயிகளுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும் என்று விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story