ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடை உரிமையாளர்கள் தர்ணா


ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடை உரிமையாளர்கள் தர்ணா
x

அனைத்து வார்டுகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு கடை உரிமையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்குட்பட்ட சுங்ககேட், பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு பணியை மேற்கொண்டார். அப்போது சாலை வரை ஆக்கிரமிப்பு செய்த கடை உரிமையாளர்களை எச்சரித்ததோடு, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திற்கு அவர் உத்தரவிட்டார். கோட்டாட்சியரின் உத்தரவுப்படி நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.ஆனால் சில நாட்களுக்கு பின்னர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் கடை வைத்திருந்தவர்கள் மீண்டும் வழக்கம் போல ஆக்கிரமிப்பு செய்து தங்களது கடைகளை நடத்த தொடங்கினர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ள எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குளித்தலை தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து குளித்தலை பகுதியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோட்டாட்சியர் புஷ்பாதேவியிடம் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து குளித்தலை பேராளம்மன் கோவில் தெரு, ஆண்டார்மெயின் ரோடு, பழைய கடைவீதி ஆகிய பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தர்ணா போராட்டம்

குளித்தலை தாலுகா மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கம் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு அளிக்கப்பட்டது. அதில் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு இணங்க எங்கள் கடை முன்பு செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்கிறோம். எங்களது கடைக்கு முன்பு முகப்பு பந்தல் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்தசூழ்நிலையில் நேற்று நகராட்சி ஆணையர் சுப்புராம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. அப்போது நகராட்சி அலுவலகம் முன்பு ஒன்றுகூடிய கடை உரிமையாளர்கள் அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து தங்களது கோரிக்கையை முன்வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதி அளிக்க வேண்டும்

இதையடுத்து குளித்தலை நகராட்சி ஆணையர் சுப்புராம் கடை உரிமையாளர்களை அழைத்து பேசினார். அப்போது பேசிய கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பகுதியில் இருந்து தொடங்கி முறையாக 24 வார்டுகளிலும் மேற்கொள்ளவேண்டும். அதைவிடுத்து குறிப்பிட்ட பகுதியில் உள்ள கடைகளின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றும் பணியை மேற்கொள்ளக் கூடாது என கூறினர்.மேலும் அதிகாரிகளின் அறிவுரைப்படி தங்களது கடைகள் முன்பு செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்வதாகவும், தங்களது கடைகள் முன்பு முகப்பு பந்தல் அமைத்துக் கொள்ளவும், கழிவுநீர் சாக்கடையின் மேல் சிமெண்ட் பலகை அமைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், கழிவுநீர் சாக்கடையில் உள்ள கழிவுகள் அகற்றப்படும் பணியின் போது தங்கள் கடை முன்பு உள்ள கழிவுநீர் சாக்கடையில் போடப்பட்டுள்ள சிமெண்டிலான பலகைகளை அகற்றிக்கொள்ள நகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

இதற்கு பதில் அளித்த நகராட்சி ஆணையர் சுப்புராம் நீதிமன்ற உத்தரவின் பேரிலும் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. குளித்தலை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் கண்டிப்பாக அகற்றப்படும். எனவே கடை உரிமையாளர்கள் விரைவாக தங்கள் கடை முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு தெரிவித்தார். மேலும் கடை உரிமையாளர்கள் விடுக்கும் கோரிக்கையை மனுவாக அளிக்கும் பட்சத்தில் அது குறித்து உயர் அதிகாரியிடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். பின்னர் கடை உரிமையாளர்கள் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி நகராட்சி ஆணையரிடம் வழங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story