கடலூரில் கடைகள் அடைப்பு
வணிகர் தினத்தையொட்டி கடலூரில் கடைகள் அடைக்கப்பட்டது.
கடலூர்:
வணிகர் தினத்தையொட்டி ஈரோட்டில் நடந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், மொத்த மற்றும் சில்லரை வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் அடைக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரைமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்து இருந்தார்.
அதன்படி வணிகர் தினமான நேற்று கடலூரில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும் நகைக்கடை வீதியான கடலூர் லாரன்ஸ் ரோட்டில் அனைத்து நகை கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மஞ்சக்குப்பம் நேதாஜி ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மளிகை கடைகள், உணவகங்கள், மார்க்கெட், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். மதியத்திற்கு பிறகு சில இடங்களில் கடைகள் திறந்திருந்ததை காண முடிந்தது.