திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் கடைகள் அடைப்பு


திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 16 Sept 2022 12:30 AM IST (Updated: 16 Sept 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டன.

திண்டுக்கல்

திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே காந்தி மார்க்கெட் உள்ளது. இங்கு சில்லறை, மொத்த விற்பனை காய்கறி கடைகள் என 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த மார்க்கெட்டுக்கு வாகனங்களில் கொண்டு வரப்படும் காய்கறி மூட்டைகளை இறக்குவதற்கு, அங்கேயே சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி நள்ளிரவு சுமை தூக்கும் தொழிலாளர்கள் சிலர் தாக்கப்பட்டனர். இதை கண்டித்து காய்கறி மூட்டைகளை இறக்காமல், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வியாபாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையே நேற்று காந்தி மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டு காய்கறி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் கொண்டு வரப்படவில்லை. தினமும் அதிகாலை 4 மணி முதல் பரபரப்பாக இயங்கும் காந்தி மார்க்கெட் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் மார்க்கெட்டின் வெளியே சாலையோரத்தில் கூட காய்கறி கடைகள் வைக்கப்படவில்லை. இதனால் நேற்று பல லட்சம் மதிப்பில் காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டது. சிறு வியாபாரிகள், பொதுமக்கள் காய்கறிகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். அதேநேரம் மார்க்கெட் வளாகத்தில், தொழிலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மார்க்கெட் திறக்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story