காந்திஜெயந்தியை முன்னிட்டு மீன் மார்க்கெட்டில் கடைகள் மூடல்


காந்திஜெயந்தியை முன்னிட்டு மீன் மார்க்கெட்டில் கடைகள் மூடல்
x

வேலூர் மீன்மார்க்கெட்டில் அதிகாரிகள் நடவடிக்கையால் கடைகள் மூடப்பட்டன. தடையை மீறி திறந்ததாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மீன்மார்க்கெட்டில் அதிகாரிகள் நடவடிக்கையால் கடைகள் மூடப்பட்டன. தடையை மீறி திறந்ததாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சிக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான ஆடு, கோழி இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் நேற்று விடுமுறை தினம் என்பதால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் சில குடியிருப்பு பகுதியில் செயல்பட்ட கடைகளுக்கு சென்று இறைச்சி வாங்கினர்.

இறைச்சிக் கடைகள் திறக்க கூடாது என்றும், தடையை மீறி செயல்படுபவா்களின் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன், சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடைகள் மூடல்

இந்த நிலையில் வேலூர் கோட்டை அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் தடையை மீறி சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இங்கு பொதுமக்கள் ஆர்வமாக சென்று மீன்கள் வாங்கினர்.

இதுகுறித்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் அதிகாரிகள் புதிய மீன் மார்க்கெட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த மீன் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டனர்.

6 பேர் மீது வழக்குப்பதிவு

அப்போது வியாபாரிகள் சிலர் ஆடு, கோழி இறைச்சி ஏதும் விற்பனை செய்யவில்லை. மீன்கள் மட்டுமே விற்பனை செய்வதாக தெரிவித்தனர். மீன்களும் இறைச்சி வகைதான், அவற்றை விற்பனை செய்யக் கூடாது. கடையை மூட வேண்டும் என அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகள் மூடப்பட்டன. அந்த நேரத்தில் மீன் வாங்க சென்ற பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சிறிது நேரம் மீன் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது. மீன் கடைகள் திறந்த 6 கடையின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story