நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் பொதுமக்கள் அவதி


நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் பொதுமக்கள் அவதி
x

ஆரணியில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

நடைபாதைகள்

ஆரணி நகரில் பட்டு சேலை உற்பத்தி, அரிசி உற்பத்தி ஆகிய 2 பிரதான தொழில்களால் ஆரணி நகராட்சிக்கும், மத்திய, மாநில அரசுக்கும் பல்வேறு வகையில் வரிகள் மூலம் வருவாய் கிடைக்கின்றன.

ஆரணியின் பிரதான சாலையான காந்தி மார்க்கெட் ரோட்டில் நகராட்சி கடை வியாபாரிகள் ஒரு புறமும், தனியார் கடை வியாபாரிகள் ஒருபுறமும் கடைகள் வைத்துள்ளனர்.

இந்த 2 பக்கமும் பொதுமக்கள் சென்று பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அப்போதைய அமைச்சராக இருந்த சேவூர் எஸ்.ராமச்சந்திரன் முயற்சியால் நடைபாதைகள் அமைக்கப்பட்டது.

அதன் விளைவாக கடைக்காரர்கள் உள்பகுதியில் வியாபாரம் செய்து வந்தனர். நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

அப்போதைய துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜெரினா பேகம் தொடர்ந்து வியாபாரிகளை கண்காணித்து நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் தொடராமலும், மக்கள் நடந்து செல்ல வேண்டும் என தடுப்பு ஸ்டீல் கம்பிகளுக்கு வெளியே இருசக்கர வாகனம் நிறுத்த வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தினார்.

ஆக்கிரமிப்புகள்

அவருக்கு பின்னர் வந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததாலும், நகராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கின் காரணமாகவும் நடைபாதைகளை அங்குள்ள வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து தடுப்பு கம்பியை தாண்டி வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் நடைபாதையை பயன்படுத்தாமல் சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அதை தாண்டி இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் கார், பஸ், லாரி போன்ற வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டியில் பழங்களை விற்பனை செய்து வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றன.

எனவே, நகரின் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறையினருடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story