தஞ்சை பர்மா பஜாரில் கடைகள் திடீர் அடைப்பு
மின் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறியதால் தஞ்சை பர்மா பஜாரில் கடைகள் திடீரென அடைக்கப்பட்டன.
தஞ்சை இர்வீன்பாலத்தில் இருந்து ஆபிரகாம் பண்டிதர் சாலை வரையில் ராணிவாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அகற்றப்பட்டன. தற்போது 2-வது கட்டமாக பர்மாபஜார் பகுதியில் உள்ள வாய்க்காலை மீட்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பர்மாபஜார் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் அறிவுறுத்தினர். அதன்படி சில கடைக்காரர்கள் தாங்களாகவே கடைகளை அகற்றினர்.இந்தநிலையில் காலி செய்யப்படாத கடைகளுக்கு செல்லும் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என பர்மாபஜார் கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்றுமாலை திடீரென கடைகளை அடைத்துவிட்டு அதன் உரிமையாளர்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோரை நேரில் சந்தித்து மின் இணைப்பை துண்டிக்கும் முடிவை கைவிட வேண்டும் என கடை உரிமையாளர்கள் முறையிட்டனர்.இதையடுத்து அவர்கள், பர்மாபஜாரில் கடைகள் வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு தான் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறினர். இதை ஏற்று உரிமையாளர்கள் அனைவரும் திரும்பி வந்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு கடைகளை மீண்டும் அவர்கள் திறந்தனர்.