பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு 'சீல்'
திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பசுமை குழு ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அமரகுஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
பொது மக்கள் யாரும் மரங்களை அகற்ற வேண்டும் என்றால் பசுமை குழுவிடம் விண்ணப்பங்களை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் பசுமைக் குழு சம்பந்தப்பட்ட இடங்களை தொடர்புடை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சீல் வைக்க வேண்டும்
மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 15 லட்சம் நாற்றங்கால் உற்பத்தி செய்து நடவுசெய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் மூலமாக பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதனை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து, கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.
மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடர்பான விழிப்புணர்வை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக ஏற்படுத்த வேண்டும். தானியங்கி மஞ்சப்பை வினியோகிக்கும் எந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட வன அலுவலர் நாக சதிஷ் கிடிஜாலா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார், நகராட்சி ஆணையர்கள் ஜெயராமராஜா, பழனி, மாரிசெல்வி, ஷகிலா, வனச்சரக அலுவலர் பிரபு, பசுமைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.