கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்-மேயரிடம் மனு


கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்-மேயரிடம் மனு
x
தினத்தந்தி 6 Sept 2023 12:30 AM IST (Updated: 6 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகராட்சி பகுதியில் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழ்ச்சான்றோர் பேரவையினர் மேயரிடம் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி பகுதியில் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழ்ச்சான்றோர் பேரவையினர் மேயரிடம் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, துணை ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்ச்சான்றோர் பேரவையினர் மாநகர தலைவர் சுதர்சன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று மேயரிடம் மனு கொடுத்தனர்.

அதில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை எனில் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் அளிக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் பெயர் பலகைகள் தமிழில் எழுதுவதற்கு பதிலாக ஆங்கிலத்தில் மட்டுமே எழுதி உள்ளனர். குறிப்பாக நெல்லை மாநகராட்சி சார்பில் சீனிவாச நகர், கட்டபொம்மன் நகர் சந்திப்பு நான்கு வழி சாலை மேம்பாலம் அருகே அணுகு சாலைக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் மண்திட்டு பூங்காக்களில் திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி என ஆங்கிலத்தில் உள்ளது. இதை சீர்மிகு நெல்லை என தூய தமிழில் எழுத வேண்டும். வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பெயர் பலகைகள் தூய தமிழில் எழுத வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த மனுவில், பழைய பேட்டை சார்தார்புரம் பகுதியில் பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் விளையாட்டு பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதேபோல் ஏராளமான பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மனு கொடுத்தனர்.

தர்ணா

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் சத்திசேனை அமைப்பின் மாவட்ட தலைவர் முருகானந்தம் மற்றும் சிலர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

முறைகேடாக இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மேயரிடம் மனு கொடுத்தனர்.


Next Story