உடற்கல்வி இயக்குனர்களுக்கு குறுகிய கால புத்தாக்க பயிற்சி
திருச்செந்தூரில் உடற்கல்வி இயக்குனர்களுக்கு குறுகிய கால புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில், சென்னை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும், வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 60 உடற்கல்வி இயக்குனர்களுக்கு 3 நாட்கள் குறுகிய கால புத்தாக்கப் பயிற்சி நடத்தியது.
தொடக்க நிகழ்ச்சியில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். நிறைவு விழாவிற்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கோல்டா கிரேனா ராஜாத்தி தலைமை தாங்கினார். இதில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் வை.குமார் கலந்து கொண்ட உடற்கல்வி இயக்குநர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பயிற்சியில் கலந்து கொண்ட உடற்கல்வி இயக்குனர்களுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் சந்திரா, பிலோமின் பாலா மற்றும் மல்லிகா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.