ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி
ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி நடந்தது.
அன்னவாசல்:
அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த தலைப்புகளில் பாடம் நடத்தப்பட்டு காணொலி காட்சி மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் குறித்தும், அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் ஆசிரியர்கள் கலந்துரையாடினர். இந்த பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் செல்வராஜ் பார்வையிட்டு, பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் உடல் நலனையும், மனநலனையும் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். மேலும் ஆசிரியர்கள் தங்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தினால் தான் மாணவர்களும் அதைப் பின்பற்றி தங்கள் உடல் மற்றும் மன எழுச்சிகளில் மேம்பாடு அடைய முடியும் என்பதனையும் எடுத்து கூறினார். அப்போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் உடனிருந்தார். இந்த பயிற்சியில் 110 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் செய்திருந்தனர்.