உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை


உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை
x

உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் சாகுபடிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கலவை அடைந்துள்ளனர்.

ஆயக்கட்டு

அமராவதி அணையை நீராதாரமாகக் கொண்டு அமராவதி ஆற்றின் மூலம் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளிலும், பிரதான கால்வாய் மூலம் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளிலும் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.இந்த பகுதிகளில் ஆண்டுக்கு 3 போகம் விளைந்து வந்த நிலையில் காலப்போக்கில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு போகம் சாகுபடியாக குறைந்து விட்டது.இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை கைகொடுத்து வருவதால் 2 போகம் சாகுபடி நடைபெற்று வருகிறது.மடத்துக்குளம் வட்டாரத்தில் மடத்துக்குளம், கணியூர், கடத்தூர், குமரலிங்கம், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.அதேநேரத்தில் பல பகுதிகளில் நெல் சாகுபடிப் பணிகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன.ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஆர்வம் காட்டினர்.ஆனால் நேரடி நெல் விதைப்பில் களைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது.எனவே நடப்புப் பருவத்தில் நாற்றங்கால் அமைத்து நெல் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

உரத்தட்டுப்பாடு

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது'தற்போதைய நிலையில் விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.மேலும் கூலி, இடுபொருட்கள், டிராக்டர் வாடகை உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்துள்ளதால் சாகுபடிச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.அந்தவகையில் ஏக்கருக்கு ரூ 30 ஆயிரத்துக்கு மேல் செலவு பிடிக்கிறது.பருவமழை கருணை காட்டினால் தான் போட்ட முதலையே எடுக்க முடியும் என்ற நிலையே உள்ளது.மேலும் உரிய நேரத்தில் உரம் இட்டால் தான் நல்ல மகசூல் ஈட்ட முடியும்.ஆனால் யூரியாவுக்கு தட்டுப்பாடு தொடர்ந்து வருவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கும் நிலை உள்ளது.எனவே விரைவில் உரத் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.அத்துடன் நெல்லுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் விவசாயிகள் நெல் சாகுபடியை கைவிட வேண்டிய சூழல் ஏற்படும்.ஏற்கனவே ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் பல இடங்களில் நெல் சாகுபடியைத் தவிர்த்து தென்னை, வாழை, காய்கறிகள் போன்ற மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.'என்று விவசாயிகள் கூறினர்.

-


Next Story