ஏரியூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறையால் பரிதவிக்கும் நோயாளிகள்
ஏரியூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறையால் முறையான சிகிச்சை கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை தடுக்க தேவையான அளவில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஏரியூர்:
50-க்கும் மேற்பட்ட கிராமங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள ஏரியூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கிறார்கள்.
இங்கு அமைந்துள்ள அரசு ஆஸ்பத்திரி பிக்கிலி, பாப்பாரப்பட்டி, கடமடை, நாகதாசம்பட்டி, பெரும்பாலை, செல்ல முடி, ஒகேனக்கல் ஆகிய 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலைமை ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இங்கு போதிய அளவில் மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் இங்கு தேவையான சிகிச்சைகள் கிடைக்காமல் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள்.
பணியாளர் பற்றாக்குறை
ஏரியூர் அரசு ஆஸ்பத்திரியில் 6 டாக்டர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 3 டாக்டர்கள் மாற்றுப் ணி அடிப்படையில் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள். இதேபோல் இந்த ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிய 7 மருத்துவ பணியாளர்களில் 2 பேர் மட்டுமே இப்போது உள்ளனர். இதேபோல் கிராமப்புற செவிலியர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவாக உள்ளனர். மருந்தாளுநர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால் இந்த ஆஸ்பத்திரியில் பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகளை முழுமையாக அளிக்க முடியாத நிலை தொடர்கிறது. இந்த அரசு ஆஸ்பத்திரியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவில் டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏரியூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விஷக்கடி சிகிச்சை பாதிப்பு
ஏரியூரைச் சேர்ந்த ஆறுமுகம்:-
ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பொதுவான மருத்துவ சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைகளுக்கு ஏரியூர் அரசு ஆஸ்பத்திரியை நம்பி உள்ளனர். ஆனால் இங்கு டாக்டர்கள், செவிலியர்கள் போதிய அளவில் இல்லை. ஏரியூர் சுற்றுவட்டார பகுதியில் பாம்பு கடி, நாய்க்கடி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாவோருக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது. அதற்குரிய மருந்துகள் இங்கு இருந்தாலும் தொடர் சிகிச்சை அளிக்க மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் விஷக்கடிகளுக்கு இங்கு முறையான சிகிச்சை அளிப்பதில்லை. இதனால் உடனடி சிகிச்சை தேவைப்படுபவர்களை பென்னாகரம், தர்மபுரி போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இங்கு தேவையான அளவில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமித்து அனைத்து வகை சிகிச்சைகளும் முறையாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழப்புகள்
மலையனூரைச் சேர்ந்த சேகர்:-
ஏரியூர் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. வாகன போக்குவரத்து வசதி குறைந்த இந்த பகுதியில் அவசர சிகிச்சை மற்றும் பிற மருத்துவ சிகிச்சைகளை பெற பொதுமக்கள் ஏரியூர் அரசு ஆஸ்பத்திரியை நாடி வருகிறார்கள். ஆனால் அங்கு போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தால் முறையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க முடிவதில்லை. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே இங்குள்ள புற நோயாளிகள் பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவில் போதிய அளவில் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். இங்கு உள்ள அனைத்து மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தி சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.