பொங்கல் பண்டிகையையொட்டி பனங்கிழங்கு தட்டுப்பாடு


பொங்கல் பண்டிகையையொட்டி பனங்கிழங்கு தட்டுப்பாடு
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நல்ல விலை இருந்தும் விளைச்சல் குறைவால் ராமநாதபுரம் அருகே பனங்கிழங்கு விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டாததால் பனங்கிழங்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

பனைக்குளம்

நல்ல விலை இருந்தும் விளைச்சல் குறைவால் ராமநாதபுரம் அருகே பனங்கிழங்கு விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டாததால் பனங்கிழங்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பனங்கிழங்கு

பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி மாதம் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கரும்பு மற்றும் பனங்கிழங்குதான். தமிழர்களின் உணவு பண்பாட்டில் பெரும் பங்கு வகிப்பவை பனையும், பனை சார்ந்த பொருட்களும். அதில் பனம்பழம், பதநீர், பனங்கற்கண்டு, பனைவெல்லம், பனங்கிழங்கு என சொல்லிக்கொண்டே இருக்கலாம். அதுபோல் பனங்கிழங்கில் அதிக மருத்துவ குணம் உள்ளதுடன் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்குகளை விரும்பி சாப்பிடுவார்கள்.

தலைப்பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கும் பெண் வீட்டார் சார்பில் சீதனபொருட்களுடன் பனங்கிழங்கும் இன்று வரை வழங்குவது தொன்றுதொட்டு இருந்து வருகின்றது. ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதியில் பனங்கிழங்கு சீசன் தொடங்கி மார்ச் மாதம் வரை இருக்கும்.

விளைச்சல் குறைவு

இந்த நிலையில் இந்த ஆண்டு மாவட்டத்தில் பனங்கிழங்கு சீசன் கடந்த மாதம் தொடங்கியது. ராமநாதபுரம் அருகே உள்ள ரெகுநாதபுரம், களிமண் குண்டு, காரான், நொச்சியூரணி, மானாங்குடி, வெள்ளரி ஓடை, முத்துப்பேட்டை, பெரியப்பட்டினம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் விவசாயிகள் பனங்கிழங்கு விவசாயத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு பருவமழை அதிக அளவு பெய்யாததால் பனங்கிழங்கு விவசாயத்தை விவசாயிகள் குறைத்துவிட்டனர்.

இதுகுறித்து ரெகுநாதபுரத்தை சேர்ந்த பனங்கிழங்கு விவசாயி ராதா கூறியதாவது, கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பெய்ததால் ஏராளமான விவசாயிகள் பனங்கிழங்கு விவசாயத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு அதிக விளைச்சல் இருந்ததால் விலை குறைவாகவே இருந்தது. 10 பனங்கிழங்குகள் உள்ள ஒரு கட்டு வெறும் 2 ரூபாய்க்கு மட்டுமே விலை போனது.

தட்டுப்பாடு

கடந்த ஆண்டு போதிய விலை இல்லாததாலும், பருவமழையும் அதிகளவு பெய்யாததாலும் பனங்கிழங்கு விவசாயத்தில் விவசாயிகள் அதிகமாக ஈடுபடவில்லை. ஆனால் இந்த ஆண்டு பனங்கிழங்குக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 10 பனங்கிழங்குகள் உள்ள ஒரு கட்டு தற்போது ரூ.40 விலை போகின்றது. ரெகுநாதபுரத்தில் இருந்து பனங்கிழங்குகள் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பப்படுகின்றன. நல்ல விலை கிடைத்து வரும் நிலையில் பனங்கிழங்குகளுக்கு இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.


Next Story