யூரியா, பொட்டாஷ் உரங்கள் தட்டுப்பாடு


யூரியா, பொட்டாஷ் உரங்கள் தட்டுப்பாடு
x

சீர்காழி பகுதியில் யூரியா, பொட்டாஷ் உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி பகுதியில் யூரியா, பொட்டாஷ் உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுவை சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு காவிரி நீர் முன்னதாகவே வந்ததாலும், ஆழ்குழாய் கிணற்று நீரை பயன்படுத்தியும் 67 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நடவு பணிகள் முடிந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிறது. குறுவை நடவு செய்யும் விவசாயிகள் 21 நாட்களுக்குள் முதல் அடி உரமும், அதன் பிறகு 15 நாள் இடைவெளியில் மேலுரம் இடுவது வழக்கம்.

உரங்கள் தட்டுப்பாடு

இந்த நிலையில் தற்போது கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில் யூரியா, பொட்டாஷ் உரங்கள் கிடைக்கவில்லை. உரத்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பயிர்களுக்கு வளர்ச்சியை கொடுக்கக்கூடிய நைட்ரஜன் சத்து நிரம்பிய யூரியா மற்றும் தூர்பிடிக்கும் பருவத்தில் கிடைக்கக்கூடிய மணிச்சத்தை வழங்கும் பொட்டாஷ் உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஒரு மூட்டை பொட்டாஷ் உரம் ரூ.1,700 என்று தமிழக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் ஒருசில தனியார் கடைகளில் ஒரு மூட்டை பொட்டாஷ் உரம் ரூ.1,900 வரை விற்பனை செய்யப்படுகிறது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மேலும் பொட்டாஷ் உரம் மற்றும் ரூ.500 மதிப்பிலான பயிர் ஊட்டச்சத்து வாங்கினால் மட்டுமே யூரியா உரம் வழங்கப்படுகிறது. ஒரு மூட்டை பொட்டாஷ், ஒரு மூட்டை யூரியா மட்டும் வழங்குவதால் பயிர்களுக்கு தேவையாக அளவு உரம் தெளிக்க முடியவில்லை. இதனால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.பாசனத்துக்கு முன்னதாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்ட தமிழக அரசு உர தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .


Next Story