செங்கல்பட்டு அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச்சூடு
செங்கல்பட்டு அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் கை, காலில் காயத்துடன் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுராந்தகம்,
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாளையம். இவருடைய மகன் தணிகா என்ற தணிகாசலம் (வயது 36). இவர், பெரியபாளையம் போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு 'ஏ' பிளஸ் வகை குற்றவாளி ஆவார். இவர் மீது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு. திருவாரூர். விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெடிபொருட்கள் பயன்படுத்தி கொலை செய்த வழக்கு உள்பட 8 கொலை வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கும், ஆயுதம் மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்திய ஒரு கலவர வழக்கும், 2 கொள்ளை வழக்குகள் மற்றும் 4 இதர வழக்குகள் என மொத்தம் 17 வழக்குகள் உள்ளது.
2014-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் போலீஸ் நிலையத்தில் இவர் மீது கொள்ளை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை செய்யூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
பிடிவாரண்டு
இவர் விசாரணைக்கு ஆஜராகாததால், இவர் மீது கடந்த 13.2.2023 அன்று அதே கோர்ட்டில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு உத்தரவிடப்பட்டது. இதனால் ரவுடி தணிகாசலம் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்ய, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனித் கடந்த 9.8.2023 அன்று செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ், தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பிரதாப் சந்திரன் மற்றும் போலீசார் இணைத்து ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் அதிகாலை தனிப்படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரவுடி தணிகாசலத்தை சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் மற்றும் போலீசார் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரி அருகே வைத்து கைது செய்தனர்.
துப்பாக்கியால் சுட்டனர்
பின்னர். எஸ்.ஆர்.எம். போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு, அவர் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழின் விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவு தணிகாசலத்தை சித்தாமூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் ஜி.எஸ்.டி. சாலையில் சென்றபோது திடீரென தணிகாசலம், போலீசாரை தாக்கிவிட்டு. போலீஸ் வாகனத்தில் இருந்து தப்பி பரந்தாமன் என்பவரின் பழைய இரும்பு கடையை நோக்கி தப்பி ஓடினார். போலீசார் அவரை எச்சரித்தனர்.
போலீசாரின் எச்சரிக்கையை மீறி மீண்டும் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டார். இதனால் தற்காப்புக்காக போலீசார். 2 ரவுண்டுகள் சுட்டனர். இதில் தணிகாசலத்தின் வலது கால் மற்றும் வலது கையில் காயம் ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
உடனடியாக அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு அருகே போலீசாரை தாக்கி தப்பியோட முயன்ற போது துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயம் அடைந்த பிரபல ரவுடி தணிகாசலம் மீது செங்கல்பட்டு மாவட்டம் படாளம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, ஆபாச வார்த்தையால் திட்டியது என மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.