குற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக இருக்க வேண்டும்


குற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஒரு வழக்கு என்பது குற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.கண்ணன் போலீசாருக்கு அறிவுரை வழங்கி பேசினார்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

போலீஸ் நிலையத்தில் ஆய்வு

வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.கண்ணன் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்துக்கு நேற்று வந்தார். அவரை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து போலீஸ் நிலையத்தை சுற்றி பார்த்த ஐ.ஜி.கண்ணன் அங்குள்ள குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்துக்குபட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்கள் வாரியாக தேங்கி கிடக்கும் குற்ற வழக்குகள், அதன் மீதான நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஆய்வு பணி மேற்கொண்டார்.

பின்னர் திருக்கோவிலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மத்தியில் ஐ.ஜி.கண்ணன் பேசியதாவது:-

மரியாதையை ஏற்படுத்தி தராது

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் சீருடை அணிந்து பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நேர்த்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். அனாவசியமாக செல்போன் பேசுவது, பள்ளி, கல்லூரி மாணவர்கள் போல் ஸ்டைலாக நிற்பது இவை எல்லாம் போலீசுக்கு மரியாதையை ஏற்படுத்தி தராது. உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொதுமக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்களுக்கான மரியாதை உங்களின் செயல்பாடு மற்றும் நேர்மையான காவல் பணி இவற்றில் தான் ஏற்படும்.

மோட்டார் வாகன சட்டங்களை மீறுவோரிடம் உரிய விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யலாம். ஒரு கிராமத்துக்கு ஒரு போலீஸ்காரர் சென்று மீண்டும் போலீஸ் நிலையம் திரும்பும்போது அந்த கிராமத்தை பற்றிய முழு தகவலை சேகரிக்க வேண்டும். அவர் தான் பணியில் ஈடுபாடு மிக்க போலீசாராக திகழ முடியும்.

அனாவசியமாக சுற்றுபவர்கள்

இரவு நேரத்தில் செல்வோரிடம் போலீசார் விசாரணை நடத்தலாம். அந்த இடத்தில் போலீசார் இருக்கிறார்கள். நம்மை பார்த்தால் விசாரிப்பார்கள் என்ற நிலை உருவானால் தான் அனாவசியமாக சுற்றுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். குறிப்பாக குற்ற வழக்குகள் குறையும்.

கஞ்சா, புகையிலை பொருட்கள், சாராயம், வெளிமாநில மது பாட்டில்கள் ஆகியவற்றை பதுக்கி வைத்தல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்யும் போது குற்றவாளிகளை பிடித்து வழக்குப்பதிவு செய்வதுடன் நிறுத்தி விடாமல் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் எங்கிருந்து கிடைத்தது? யார் கொடுத்தது? என்று தீவிர விசாரணை நடத்தி பொருட்களை கொடுத்தவர்கள், கடத்துபவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த குற்றத்தை அடியோடு ஒழிக்க முடியும்.

மக்களிடம் சுமூகமான உறவு

ஒரு வழக்கு என்பது ஒரு குற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக இருக்க வேண்டும். பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்வது என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போன்றது தான். பொதுமக்களிடம் சுமூகமான உறவை வளர்த்துக் கொள்வதன் மூலம் உங்களுக்கு நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர்கள் பாபு, பாண்டியன், ராதிகா, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் திருக்கோவிலூர் உட்கோட்டத்தை சோ்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story