தமிழனின் தொன்மையை உலகுக்கு எடுத்து காட்டியது: கீழடியில் கண்டெடுத்த இரும்பு 2,750 ஆண்டுகளுக்கு முற்பட்டது- உலகத் தமிழ்ச்சங்க இயக்குனர் அன்புச்செழியன் தகவல்
தமிழனின் தொன்மையை உலகுக்கு எடுத்து காட்டியது கீழடி. அங்கு கண்டெடுத்த இரும்பு 2,750 ஆண்டுக்கு முற்பட்டது என்று உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் அன்புச்செழியன் கூறினார்.
தமிழனின் தொன்மையை உலகுக்கு எடுத்து காட்டியது கீழடி. அங்கு கண்டெடுத்த இரும்பு 2,750 ஆண்டுக்கு முற்பட்டது என்று உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் அன்புச்செழியன் கூறினார்.
பண்பாடு
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் வளாகத்தில், திண்டுக்கல் எம்.வி.முத்தையா மகளிர் அரசுக் கலைக் கல்லூரியில் வரலாற்றுத்துறை மாணவர்களுக்கான படிப்பிடைப் பயிற்சி நேற்று நடந்தது. சங்கத் தமிழரின் பண்பாடு என்ற தலைப்பில் சொற்பொழிவு நடத்தப்பெற்றது. உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் அன்புச்செழியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் மக்களின் நாகரிகம், தொழில், சமயம் முதலியவற்றை அறிந்துகொள்வதற்கு நாணயங்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் போன்றவை நமக்கு இருந்தாலும் தமிழ் மற்றும் தமிழரின் தொன்மையினை அறிந்து கொள்வதற்கு சங்க இலக்கியம் மிகவும் பயன்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இனம் நம் தமிழ் இனம்.
கீழடி அகழாய்வு
கீழடி போன்ற அகழாய்வுகள் மூலம் தமிழரின் நாகரிகத்தையும் பண்பாட்டினையும் அறிந்து கொள்ள முடிகிறது. தற்போது கீழடியில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சிகள் முடிந்துள்ளன. 5-ம் கட்ட அகழாய்வின்போது கீழடியில் சிறிய இரும்புத்துண்டு கண்டெடுக்கப்பட்டது. இதன் காலம் குறித்து அறிந்து கொள்ள ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு இதனை ஆராய்ந்து பார்த்ததில் இந்தியாவிற்கே மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த இரும்புத்துண்டின் காலம் சுமார் 2750 ஆண்டுக்கு முற்பட்டது என்று தெரியவந்தது. கீழடி அகழாய்வை போல எந்த அகழாய்வும் தமிழரின் தொன்மையை எடுத்துக்காட்டியது இல்லை.
தமிழ்ச் சமூகம் சிறந்த கல்வியறிவு, நாகரிகம், பண்பாடு மிக்க சமூகமாகத் திகழ்ந்துள்ளது. கீழடியில் கிடைத்த பானை ஓட்டில் எழுதிய எழுத்துகளால் தமிழ்ச் சமூகம் சிறந்த கல்வியறிவு மிக்க சமூகமாக வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்திருக்கிறது. மிக அறிவார்ந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்க இலக்கியம்
கருமாத்தூர், அருளானந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் முத்து.சந்தானம் பேசும்போது, சங்க இலக்கியத்தில் அகநானூற்றில் அமைந்த பாடலில், 'தலைவன் பொருள் ஈட்டுவதற்காக வெளியே சென்று வீடு திரும்பும் போது அவனது தேரில் கட்டப்பட்டுள்ள மணியின் ஓசையால் மலரில் தேனருந்தும் வண்டுகளுக்குத் தொந்தரவு ஏற்படாதவாறு, அந்த மணிகளைத் தலைவன் இழுத்துக் கட்டுவான். இந்தப் பாடலில் பண்பாடு வெளிப்படுகிறது. மேலும், புறநானூற்றில் மோசிக்கீரனார் அரண்மனையில் இருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கியபோது மன்னன் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை கவரி வீசிய காட்சி பண்பாட்டினை எடுத்துரைக்கிறது.
பண்பு என்பது பழமையானது. பண்பாடு என்ற சொல் 20-ம் நூற்றாண்டில் தான் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சங்க இலக்கியத்தில் 'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்' என்ற வரி பண்பாடு பற்றிக் கலித்தொகையில் கூறிய பாடலின் வரியாகும். இதில் 'பாடறிந்து ஒழுகுதல்' என்பது பண்பாட்டை குறிக்கிறது.
உலக நியதி
மேலும், பாடறிந்து என்பதைப் பிரித்தால் பாடு + அறிந்து என வரும். அதாவது உலக நடைமுறையையும் சமுதாயத்தின் நெறிகளையும் நடப்பதே உயர்ந்த பண்பாடு என்று பொருள் தருகிறது. நல்ல கல்வியை கற்றவன் அதைக் கற்றதோடு நின்றுவிடாமல் உலகத்து நியதிகளை ஏற்று உலகோடு ஒத்து வாழக் கற்றுக் கொண்டவனாய் இருத்தல் வேணடும். அவ்வாறு வாழத் தெரியாதவன் அவன் கற்ற கல்வியினால் ஒரு பொருளும் இல்லை என்று வள்ளுவர் கூறுகிறார் என்றார்.
விழாவினை சங்கத் தமிழ்க் காட்சி கூட விளக்குனர் புஷ்பநாச்சியார் ஒருங்கிணைத்தார். அதில் காந்தி அருங்காட்சியக கல்வி அலுவலர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.