பிளஸ் 2 பொதுத்தேர்வில் 337 மார்க் பெற்று தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை மாணவி ஸ்ரேயா....! குவியும் பாராட்டு


பிளஸ் 2 பொதுத்தேர்வில்  337 மார்க் பெற்று தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை மாணவி ஸ்ரேயா....! குவியும் பாராட்டு
x

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை இவர் ஆவார்.

பள்ளிபாளையம்:

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த திருநங்கை மாணவி ஸ்ரேயா 337 மார்க் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை இவர் ஆவார். இந்த பள்ளியில் 378 பேர் தேர்வு எழுதிய நிலையில் 356பேர் தேர்ச்சி பெற்று 94 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.

மாணவி ஸ்ரேயா ஆவராங்காடு பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி மகள் ஆவார். அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-

தமிழ் 62, ஆங்கிலம் 56, பொருளியல் 48, வணிகவியல் 54, கணிதம் 58, கணிணி அறிவியல் 59. இந்த சாதனை பற்றி திருநங்கை மாணவி ஸ்ரேயா கூறியதாவது:-

நான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆண்டுகள் படித்தேன். இன்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இதில் நான் 337 மதிப்பெண் வாங்கி உள்ளேன்.

எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த என்னுடைய தலைமை ஆசிரியரும், என்னுடைய வகுப்பு ஆசிரியர்களும், என்னுடைய பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களும், இந்த சாதனைக்கு காரணம். நான் இந்த பள்ளியில் படித்தபோது என்னை 3-ம் பாலினமாக யாரும் பார்க்கவில்லை.

ரொம்ப சந்தோஷமாக இருக்கு. என்னை எல்லா மாணவர்கள் போல் ஆசிரியர்கள் பார்த்தார்கள். இது தான் எனக்கு படிப்பதற்கு ஊக்குவிப்பதாக இருந்துச்சு. ஆசிரியைகள், தலைமை ஆசிரியர் என்னை அடிக்கடி அழைத்து நல்லா படி என ஊக்கப்படுத்தினார்கள். இந்த பள்ளியில் படித்தது ரொம்ப பெருமையாக இருக்கிறது.

அரசு தனக்கு உதவி செய்ய முன் வந்தால் பல்வேறு சாதனைகளை செய்ய முடியும். தொடர்ந்து என் போன்ற திருநங்கைகள் கல்வியில் கவனத்தை செலுத்தி வாழ்வின் மேன்மை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story