இறால் உற்பத்தியை பெருக்க வேண்டும்


இறால் உற்பத்தியை பெருக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உரிய பதிவுகள் மேற்கொண்டு இறால் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

மரக்காணத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் இறால் வளர்ப்பில் வளர்ச்சி தொழில்நுட்பம் மற்றும் நிகழ்கால பிரச்சினைகள் குறித்து விவசாயிகளுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக சந்தையில் இறால் மற்றும் இறால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் சர்வதேச சந்தையில் இறால் தேவைக்கான இடைவெளி அதிகரிப்பால் இறால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

முறையான பதிவுகள்

விழுப்புரத்தில் 2,072 ஹெக்டேர் உகந்த இடமாக இருப்பினும் 140 ஹெக்டேர் உவர்நீர் பரப்பு மட்டுமே இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டதில் தற்போது உற்பத்தி கடந்த வருடத்தில் 1,500 மெட்ரிக் டன்னாக உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 98 இறால் பண்ணைகள் முறையாக பதிவுகள் மேற்கொண்டு 128.82 ஹெக்டேர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் இறால்குஞ்சு பொறிப்பகங்களில் 39 எண்ணிக்கை விழுப்புரம் கடற்கரையோரம் அமைந்துள்ளது. இறால் பண்ணை மற்றும் இறால்குஞ்சு பொறிப்பகங்கள் மூலம் அருகிலுள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுவதுடன் 200 தொழில்நுட்ப பணியாளர்கள், 1,500 பணியாளர்கள் இறால் பண்ணை, இறால்குஞ்சு பொறிப்பகங்களில் பணியாற்றி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் இறால் பண்ணை மூலம் பெறப்பட்ட நிகர லாபம் தோராயமாக ரூ.18 கோடி, இறால்குஞ்சு பொறிப்பகத்தின் நிகர லாபம் ரூ.67 கோடி வரை ஈட்டப்பட்டுள்ளது.

உற்பத்தியை அதிகரிக்க

இதுவரை இறால் பண்ணை பதிவு மேற்கொள்வதற்கான பரிந்துரை மாவட்ட அளவிலான குழு மூலம் செய்யப்பட்டது. அதனை இன்னும் எளிதாக்கும் வகையில் துணை பிரிவு அளவிலான குழுவால் 5 ஹெக்டேர் வரை பதிவு செய்ய கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திடமும், 5 ஹெக்டேருக்கு மேல் உள்ள இறால் பண்ணைகள் மாவட்ட அளவிலான குழு மூலம் அனுமதி பெற்ற பின்னரே இறால் பண்ணை அமைத்திட வேண்டும். உரிய அனுமதி பெறாமல் இறால் பண்ணை அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் மாவட்டத்தில் உள்ள கழுவெலி பகுதியை சுற்றி அமைந்திருக்கும் மற்றும் அமைக்கப்படும் இறால் பண்ணை உரிமையாளர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணைப்படி கழுவெலி பகுதிக்கு எவ்வித சேதம் ஏற்படுத்தாமலும், பைப்லைன் பதித்தல் ஏதும் இல்லாமலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகள், சட்ட விதிகளை பின்பற்றி இறால் வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும். இறால் குஞ்சு பொறிப்பகங்களும் தரமான முறையில் இறால் உற்பத்திக்கு வழிவகுக்க வேண்டும். அரசு நலத்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறை மூலம் விவசாயிகள், உரிய பதிவுகள் மேற்கொண்டு இறால் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் புரத உணவுப்பொருள் உற்பத்தியை அதிகரிப்பதுடன் அன்னிய செலவாணியை அதிகரிக்க செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மரக்காணம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தயாளன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பழனி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி, துணை இயக்குனர் வேல்முருகன், உதவி பேராசிரியர் ஷோபனா, சார் ஆய்வாளர் (மீன்வளம்) பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story