கடலூரில் பரபரப்பு 30 படகுகளில் சுருக்குமடி வலையுடன் நின்ற மீனவர்கள் விரட்டியடிப்பு அத்துமீறி நுழைந்தால் பறிமுதல் செய்வோம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை


கடலூரில் பரபரப்பு  30 படகுகளில் சுருக்குமடி வலையுடன் நின்ற மீனவர்கள் விரட்டியடிப்பு  அத்துமீறி நுழைந்தால் பறிமுதல் செய்வோம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
x

கடலூரில் 30 படகுகளில் சுருக்குமடி வலையுடன் நின்ற மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் அத்துமீறி நுழைந்தால் படகு, வலைகளை பறிமுதல் செய்வோம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

கடலூர்


கடலூர் முதுநகர்,

கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்திற்கு புறம்பாக சில மீனவர்கள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடிவலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களின் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்தார். இருப்பினும் சில மீனவர்கள், தொடர்ந்து சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகிறார்கள். இதனால் மற்ற மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை கண்டித்தும் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

30 படகுகளுடன் தயார்

இந்த நிலையில் மீன்வளத்துறை துணை இயக்குனர் வேல்முருகன் தலைமையில் சார் ஆய்வாளர் பிரபாகரன், மீன்வள மேற்பார்வையாளர் அறிவுவேந்தன், போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ராஜாங்கம் உள்ளிட்ட 40 பேர் கொண்ட குழுவினர் 2 விசைப்படகுகளில் நேற்று காலை கடலில் ரோந்து சென்றனர்.

அப்போது தேவனாம்பட்டினம் கடல் பகுதியில் 30 படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த படகுகளில் மீனவர்கள் சுருக்குமடி வலைகளுடன் மீன்பிடிக்க தயார் நிலையில் இருந்தனர். உடனே அதிகாரிகள் குழுவினர், அந்த படகுகளில் இருந்த வலைகளை பறிமுதல் செய்ய முயன்றனர்.

மீனவர்கள் விரட்டியடிப்பு

அதிகாரிகளை கண்டதும் மீனவர்கள், தங்களது படகுகளை இயக்கி, வேகமாக புறப்பட்டனர். உடனே அதிகாரிகள் குழுவினர், 30 படகுகளையும் விரட்டியடித்தனர். இதனால் சுருக்குமடி வலைகளுடன் மீனவர்கள், புதுச்சேரி மாநில எல்லைக்குட்பட்ட கடல் பகுதிக்கு சென்றனர்.

தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையுடன் கடலூர் மாவட்ட எல்லைக்குள் நுழையக்கூடாது. மீறி நுழைந்தால் சுருக்குமடி வலை மட்டுமின்றி படகுகளும் பறிமுதல் செய்யப்படும் என்று மீனவர்களை எச்சரித்து விட்டு அதிகாரிகள் குழுவினர் கடலூருக்கு திரும்பி வந்தனர்.

நோட்டீசு

இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகம், நல்லவாடு, தாழங்குடா, சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை, அக்கரைகோரி, தேவனாம்பட்டிணம், எம்.ஜி.ஆர். திட்டு உள்ளிட்ட கிராமங்களில் சுருக்குமடி வலை மற்றும் அதிக திறன் கொண்ட என்ஜின் படகுகளை 24 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. கடலில் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story