சமையல் மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு
மதுகுடிக்க பணம் தரமறுத்ததால் சமையல் மாஸ்டரை அரிவாளால் வெட்டிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அரிவாள் வெட்டு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஆதனூரை சேர்ந்தவர் வினோத் குமார் (வயது 39), சமையல் மாஸ்டர். இவர் சம்பவத்தன்று கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் 2 பேர் வினோத்குமாரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பணம் தர மறுத்ததாக தெரிகிறது.
இதனால் கோபம் அடைந்த மர்ம ஆசாமிகள் வினோத் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
வலைவீச்சு
இதில் பலத்த காயம் அடைந்த வினோத் குமார் வலியால் அலறினார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் பீதியடைந்த மர்ம ஆசாமிகள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, வினோத்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வினோத் குமார் அளித்த புகாரின் பேரில் கரூர் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 மர்ம ஆசாமிகளையும் வலைவீசி தேடி வருகிறார்.