லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு:ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு ஜெயில்


தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:10+05:30)

சாத்தான்குளத்தில் லாரி டிரைவரை சாதியை சொல்லி திட்டி அரிவாளால் வெட்டிய ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் லாரி டிரைவரை சாதியை சொல்லி திட்டி அரிவாளால் வெட்டிய ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

லாரி டிரைவர்

சாத்தான்குளம் ஆர்.சி.வடக்கு தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் செந்தில் என்ற செந்தில்குமார். லாரி டிரைவர். கடந்த 25.4.2014 அன்று செந்தில்குமார் கரையடி சுடலைமாடசாமி கோவில் அருகே லாரியை ஓட்டி சென்றார். அங்கு சாத்தான்குளத்தை சேர்ந்த காளிராஜ் என்ற காளி (வது 39) என்பவரும் ஆட்டோவில் வந்தார். அப்போது செந்தில்குமார் லாரியில் ஆட்டோவை முந்தி சென்று உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 30.4.2014 அன்று செந்தில்குமார் அந்த பகுதியில் உள்ள தியேட்டர் அருகே நின்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, காளிராஜ் என்ற காளி, அவரது நண்பர்கள் சாத்தான்குளத்தை சேர்ந்த பரமசிவன் மகன் சுப்பிரமணியன் (29), கணபதி மகன் முத்துராமலிங்கம் (34) ஆகியோர் வந்தனர். அவர்கள் செந்தில்குமாரிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டினர். மேலும் சாதியை சொல்லி திட்டி உள்ளனர்.

7 ஆண்டு ஜெயில்

இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (பி.சி.ஆர். கோர்ட்டு) நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியன், காளிராஜ் என்ற காளி, முத்துராமலிங்கம் ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பூங்குமார் ஆஜர் ஆனார்.


Next Story