தாய்- மகள்களுக்கு அரிவாள் வெட்டு
திருவையாறு அருகே தாய்- மகள்களை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவையாறு;
திருவையாறு அருகே தாய்- மகள்களை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுபோதை
திருவையாறு அருகே உள்ள கல்யாணபுரத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி ஜோதி(வயது55). சீனிவாசன் இறந்துவிட்டார். ஜோதியுடன் அவரது மகள்கள் வசந்தி (35), ரம்யா (30) ஆகியோர் வசித்து வருகிறார்கள். அதே கல்யாணபுரத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சரவணன் (25) நேற்று முன்தினம் மதுபோதையில் ஜோதி வீட்டுக்குள் சென்றார். இதை அறிந்த ஜோதி மற்றும் அருகில் இருந்தவர்கள் சரவணனை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டனர்.
அரிவாள் வெட்டு
இது சம்பந்தமாக திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஜோதி புகார் செய்ய இருப்பதாக கேள்விப்பட்ட சரவணன், ஜோதி வீட்டுக்குள் சென்று ஜோதி மற்றும் அவரது மகள்கள் ரம்யா, வசந்தி ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ஜோதி, வசந்தி, ரம்யா ஆகிய 3 பேரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஜோதி கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.