சித்த மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் போராட்டம்


சித்த மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் போராட்டம்
x

அடிப்படை வசதிகள் செய்யக்கோரி பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

அடிப்படை வசதிகள் செய்யக்கோரி பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்த மருத்துவ கல்லூரி

பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சித்த மருத்துவ பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, சித்த மருத்துவ செவிலியர் பயிற்சி, மருந்தாளுனர் பயிற்சி என சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

தினமும் 1,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். சித்த மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்காக 3 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் போதிய இடவசதிகள், கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தாங்கள் பாதிக்கப்படுவதாக மாணவிகள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நேற்று காலையில் கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் டீன் சாந்த மரியாள், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவ-மாணவிகள் கூறுகையில், "பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடுதியில் வசதிகள் இல்லை. ஒரே அறையில் 7 மாணவிகள் வரை தங்க வேண்டியுள்ளது. இதனால் இடநெருக்கடி ஏற்படுகிறது. விடுதி கட்டிடங்கள் ஆங்காங்கே இடிந்து விழுவதால் அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது. மேலும் மர்மநபர்களும் அடிக்கடி விடுதிக்குள் புகுந்து விடுகின்றனர். எனவே பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு விடுதி வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். வகுப்புகள் நடந்து கொண்டு இருக்கும் போதே மேற்கூரைகள் இடிந்து விழுகிறது. கல்லூரி வளாகத்தில் சுகாதார வளாகம் இல்லாததால் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். எனவே அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்து தர வேண்டும்" என்றனர்.

போராட்டம் தொடரும்

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த மாணவ-மாணவிகள் கனிமொழி எம்.பி., சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் நேரில் வந்து கல்லூரியை ஆய்வு செய்து எங்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.


Next Story